கோஹ்லியுடன் செல்பி : 16 வயதில் கோடீஸ்வரனான இளம் வீரர்!!

407


 

கோஹ்லியுடன் செல்பி



ஐபிஎல் தொடரில் 1.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், இந்திய அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஒன்றாக நின்று செல்பி எடுக்க வேண்டும் என்பது தான் எனது கனவு என்று கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான அடுத்தாண்டு ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.





ஆனால் ஏலத்தில் கலந்துகொள்ள அதில் இருந்து 346 வீரர்களை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. அதுமட்டுமின்றி 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருந்ததால், ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


ஏலத்தின் முடிவில் மொத்தம் 60 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 40 இந்திய வீரர்களும் 20 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவார். மொத்தம் இதற்காக சுமார் 106 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மனை ரூ.1.5 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பர்மன், 2002-ஆம் ஆண்டு பிறந்தவர். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு வங்க அணியில் விளையாடி வரும் பர்மன், விஜய் ஹசாரே போட்டியில் விளையாடி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய பர்மன், அனைத்து இந்திய இளம் வீரர்களைப் போல கோஹ்லிதான் என்னுடைய ரோல் மாடல். எப்போதுமே அவருடன் ஒரு செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறேன். அதற்காக முயற்சித்தும் இருக்கிறேன். ஆனால் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போது ஐபிஎல் போட்டிகளின்போது ஓய்வறையை என்னுடைய ஹீரோவோடு பகிர்ந்துகொள்வேன் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை, அவருடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்பது எனது கனவு என்று கூறியுள்ளார்.