5 ஓட்டத்துக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அணி : விடாது துரத்தும் அவலம்!!

521


 

விடாது துரத்தும் அவலம்



இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 45 ஓட்டத்தினாலும், இராண்டாவது போட்டியில் 21 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது.





இந் நிலையில் இவ் விரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது இறுதியமான போட்டி இன்று எடன் பார்க்கில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை குவித்தது.


அணி சார்பாக ரோஷ் டெய்லர் 134 ஓட்டங்களையும், அணித் தலைவர் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஹென்றி நிக்கலஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை குவித்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மலிங்க மூன்று விக்கெட்டுக்களையும், சந்தகான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.


365 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு தனஞ்சய டிசில்வா மற்றும் திக்வெல்ல ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்து முதலாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் 8.1 ஆவது ஓவரில் 36 ஓட்டத்துடன் தனஞ்சய டிசில்வா டிம் சவுதியுடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய குசல் பெரேராவுடன் ஜோடி சேர்ந்தாடிய திக்வெல்ல 46 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய குசல் மெண்டீஸும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையிலும், தசூன் சானக்க 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.


இதனால் இலங்கை அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த திஸர பெரேரா குசல் பெரேராவுடன் இணைந்து அதிரடி காட்ட ஆரம்பிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. எனினும் 22 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் குசல் பெரேரா 43 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க 38.3 ஆவது ஓவரில் திஸர பெரேராவும் 80 ஓட்டத்தை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 38.3 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. எனினும் இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களம் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக இலங்கை அணி 5 ஓட்டங்களை எடுப்பதற்கு ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக லொக்கி பெர்க்கன் 4 விக்கெட்டுக்களையும், ஈஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி, ஜேம் நிஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். ஆகையால் இப் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.