கொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்து அதற்கு பார்வை வரவைத்த இளைஞன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

526

நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகத்தில் பார்வையிழந்த நல்ல பாம்பிற்கு பார்வை வரச் செய்து அதை பாதுகாப்பான இடத்தில் விட்ட இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்புகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாம்பு இருக்கிறது என்று தகவல் கிடைத்தால், இவர் உடனடியாக அங்கே சென்று பாம்புகளை பத்திரமாம மீட்டு காட்டுப்பகுதியில் விட்டுவிடுவார்.

இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி கோயமுத்தூரின் மலுமிச்சைபட்டி அருகே நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற இவர், பாம்பினை பத்திரமாக பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் பாம்பின் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளார்.

சாதரணமாக நல்ல பாம்பு மனிதர்களைப் பார்த்தால் சீறும் தன்மை கொண்டவை. ஆனால் இவர் கொண்டு வந்த பாம்போ மனிதன் தொட்டால் மட்டுமே சீரியது. இதனால் அதை சற்று உற்று கவனித்த போது பாம்பின் கண்களில் அதன் தோல் உரிக்கப்படாமல் இருப்பதைக் கண்டுள்ளார். பாம்பின் கண்ணில் தான் பிரச்சனை, என்பதை அறிந்த இவர், உடனடியாக பவானிசாகரில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு தன்னுடைய பாம்பை கொண்டு சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையில் அசோகன் என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு கட்டு விரியன் பாம்பு அடிப்பட்டு கிடந்த போது, அதற்கு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியவர்.

அவர் பாம்பை பரிசோதனை பார்த்த போது, பாம்பின் கண்ணில் அடிபட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார். பாம்பிற்கு மீண்டும் கண் தெரிய வேண்டும் என்றால், அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறியுள்ளார்.

அதன் பின் பாம்பின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 24-ஆம் திகதி பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பிறகு பாம்பு வெளிச்சத்தைப் பார்க்க கூடாது என்பதால் வெளிச்சம் பரவாத இடத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.

பாம்பின் நடவடிக்கைகளைக் கவனித்த மருத்துவர் பாம்பு சில நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என தெரிவித்திருந்தார். அதன் படி தொடர்ந்து நான்கு நாட்கள் பாம்பின் கண் திறனை பரிசோதித்து வந்த மருத்துவர், பாம்பிற்குப் பார்வை தெரிகிறது என்பதை உறுதி செய்ததும் மீண்டும் சுரேந்திரனிடம் கொடுத்துள்ளார்.

சுரேந்திரனும் அந்த பாம்பை பத்திரமாக வாங்கிச் சென்று, ஒரு காட்டுப்பகுதியில் விட்டுள்ளார். இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், விவசாயம்தான் நம்முடைய முதுகெலும்பு, அப்படியான உணவு உற்பத்தியில் மனிதனுக்கு உதவியாக இருப்பதில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விவசாயிகளுக்குத் தொல்லையாக இருக்கிற எலிகளைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. அப்படியான பாம்புகளைக் கொல்வதும் அவற்றைக் காயப்படுத்துவதும் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் எதிரான செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எது விஷம் கொண்ட பாம்பு, எது விஷமில்லாத பாம்பு போன்றவை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பாம்பை கண்டவுடன் மக்கள் கொல்ல தயாராகிவிடுகின்றனர். இனிமேல் பாம்பைக் கண்டால் அருகில் இருக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுவரை சுரேந்திரன் குழுவினர் 4000-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். சுரேந்திரன் தனியார் நிறுவனத்தில் இரவு நேர மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார். பணி நேரம் போக இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.