வவுனியா நெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல்? அரச அதிகாரிகள் அசமந்தம்!!

410

 

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான் கோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2012ம் ஆண்டு தொடக்கம் இதுவரை கணக்கறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை இதன் பின்புலத்தில் எதேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அசமந்தப்போக்காக செயற்படுவதாகவும் அக்கிராமத்தினை சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.

காத்தான் கோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் 2012ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை செயற்பட்டு வருகின்றது. அன்று தொடக்கம் கணக்கறிக்கைகள் வெளிவராத நிலையில் தற்போது பதவியில் உள்ள கிராம சேவையாளருக்கும் இதற்கு முன்பு இக் கிராமத்தில் கடமையாற்றிய கிராம சேவையாளர்களுக்கும் கலாச்சார உத்தியோகத்தருக்கும் கணக்கறிக்கையினை வெளியிடுமாறு பொதுமக்கள் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் ஆலய நிர்வாகத்தினர் இதுவரை வெளியிடவில்லை.

பல தடவைகள் ஆலய பொதுக்குழுக் கூட்டம் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள் முன்னினையில் கூடிய போதிலும் காலஅவகாசம் தேவை என பல தடவைகள் கூறி ஆலய நிர்வாகசபையினர் பொதுமக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி வருவதாகவும் கிராம மக்களின் கையெழுத்துடன் அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அக்கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ் ஆலயத்தின் பொதுக்கூட்டம் இன்றையதினம் (22.01.2019) இடம்பெற்றது. இதன்போது இக் கூட்டத்தில் நெளுக்குளம் கிராம சேவையாளர், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நான்கு வருடங்களாக கணக்கறிக்கை வெளியிடவில்லை இன்றிலிருந்து பழைய கணக்கறிக்கையினை விடுத்து புதிதாக மேற்கொள்ளுமாறு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் தற்போது உள்ள நிர்வாகத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் கடந்த நான்கு வருடங்களாக கணக்கறிக்கையில் ஊழல் எதேனும் இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ஆலயத்தில் மின்இணைப்பு வேலைகளை செய்த நபரின் பெயரில் போலி கையெழுத்திட்டு செலவு செய்த உறுதிச்சீட்டில் மோசடி மேற்கொண்டுள்ளதாக ஆலயத்திற்கு மின் இணைப்பு மேற்கொண்ட நபரினால் எழுத்து மூலம் ஆலய நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பாக ஓய்வுபெற்ற கலாச்சார உத்தியோகத்தர் ஒருவரிடம் வினவிய போது, ஆலயத்தினை பதிவு செய்ததன் பின்னர் ஆலய கணக்கறிக்கை வருடா வருடம் வெளியிடப்பட வேண்டும். ஆலய கட்டிட வேலைகள் இடம்பெறும் பட்சத்தில் இரு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கலாம்.

பிரதேச கலாச்சார உத்தியோகத்தரினால் அரச கணக்காய்வுக்கு உட்படுத்த முடியும் அல்லது இவ்வாறு நான்கு வருடங்களாக கணக்கறிக்கை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுப்பதாக தெரிவித்தார்.