வவுனியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

450

 

ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டங்கள் இன்று (23.01.2019) மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.30 மணியளவில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னனெடுத்திருந்தபோதும் அதில் சொற்ப உயர்வுதான் கிடைத்தது. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என தெரிவிக்கும் கம்பனி நிர்வாகம் நிர்வாகிகளிற்கு இலட்சகணக்கில் சம்பளங்களை வழங்குகின்றன.

நாளாந்தம் அதிகரித்துவரும் வாழ்கைசெலவு பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது தொழிலாளர்களிள் கோரிக்கை நியாயமானது . அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவே இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் வழங்கு , ஏமாற்றாதே ஏமாற்றாதே தொழிலாளர்களை ஏமாற்றாதே, தொழிலாளர்கள் கேட்பது ஆயிரம் ரூபாய் முதலாளிகள் முன்வைப்பது பிச்சைக்காசு, தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே என பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.