போலி கடவுச்சீட்டுக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்!!

431


பெரும்பாலான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்குள் வந்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவரான அம்பிகை சீவரட்ணம் ஸ்கை நியூஸ்க்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகமான ஸ்கை நியூஸ் இல் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



இலங்கையின் தமிழர்கள் பிரித்தானியாவுக்கான வீசாவை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனையடுத்தே அவர்கள் முகவர்களை நாடி போலி கடவுச்சீட்டுக்களையும், வீசாக்களையும் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அனுமானப்படி 80 முதல் 85 வீதமான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



இது மிகவும் பெரிய மற்றும் ஆபத்தான வர்த்தகமாகும். இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்திருப்பதால் இலங்கையர்கள் தொழில்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை போலியான வீசாவில் பிரித்தானியாவுக்கு வந்ததாக ஸ்கை செய்தியாளரிடம் அருள்சீலி ஸ்ரீதரன் என்பவர் கூறியுள்ளார்.


தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச்செல்ல முடியாது. அப்படி சென்றால் கொல்லப்படுவேன் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். மேலும், தேவராஜா மற்றும் கெலி என்ற தமிழர்கள் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியபோதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேவராஜா 20 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிவுக்கு வந்தார். இவர்கள் ஒரு சிறிய அறையிலேயே வாழ்கின்றனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


இதேவேளை, தாம் ஏனைய பிள்ளைகளை காட்டிலும் வேறுப்பட்ட விதத்தில் வாழ்வதால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்தப்பிள்ளைகள் ஸ்கை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.