வவுனியாவில் நடைபாதை வியாபாரத்தால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்!!

284

டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்

வவுனியா – இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதால் கழிவுகள் சென்று கால்வாய்களை அடைத்து நீர் தேங்கி டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதால் இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் பொது மக்கள் தெரிவிக்கையில்,

இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளிலுள்ள கால்வாய்கள், நடைபாதையின் இருபகுதி ஓரங்களில் சிலர் கால்வாயில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமது கழிவு குப்பைகளை அப்பகுதியில் வீசி வருகின்றனர்.

இதனால் கால்வாயினால் செல்லும் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து டெங்கு நுளம்புகள் பெருகுவதுடன் மாலை நேரங்களில் அப்பகுதியில் நுளம்பு தொல்லைகள் அதிகரித்து காணப்படுகின்றன. சுகாதாரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை வியாபாரத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன. நடைபாதையில் வியாபார நடவடிக்கையினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.