வவுனியாவிலிருந்து சென்ற பேரூந்து விபத்தில் 4 பேர் பலி : சாரதி கைது, நடத்துனர் தப்பியோட்டம்!!

338

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி

நான்கு பேர் உயிரிழப்பதற்கு காரணமான சிலாபம் – மஹவௌ பகுதியில் பேருந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில். மாரவில மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதேநேரம், குறித்த விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ள பேருந்தின் நடத்துனரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து மஹவ சந்தியில் வைத்து இன்று அதிகாலை 4.30 அளவில் விபத்துக்குள்ளானது.

குறித்த பேருந்து, பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது, சாரதியினால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாதமையினால், அருகிலிருந்து மின்சார பரிமாற்றி இயந்திரக் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது பேருந்திலிருந்த 19 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மின்சார பரிமாற்றி இயந்திரம் பொறுத்தப்பட்டிருந்த கம்பம் பேருந்தின் மீது வீழ்ந்திருந்ததன் காரணமாக, விபத்துக்குள்ளான பேருந்துக்குள் சிக்குண்டிருந்தவர்களுள் மூன்று பேரை மீட்க, சுமார் மூன்று மணிநேரம் எடுத்ததாக சம்பவ இடத்திலிருந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்தின் சாரதி, அதிக வேகத்துடன் பேருந்தை செலுத்திச் சென்றமையே இந்த விபத்திற்கு காரணமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.