எல்லையில் இந்திய இராணுவம் ருத்ர தாண்டவம் : தொடர் தாக்குதல்!!

544

இந்திய இராணுவம் ருத்ர தாண்டவம்

இந்தியாவில் கடந்த 14ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்ற துணை இராணுவப்படையினர் மீது, பாகிஷ்தான் ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்த ஒரு இளைஞர் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியிருந்தார்.

குறித்த தாக்குதலின் போது 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் 12 மணித்தியாலமாக நடத்திய வேட்டையில், புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாருக்கு நெருக்கமானவர், கம்ரான் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து தங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கம்ரான். பாதுகாப்பு படையினர் கடந்த 12 மணி நேரமாக எல்லையில் நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் கம்ரான் கொல்லப்பட்டதோடு அவரது நண்பனான மற்றொரு தீவிரவாதி காஜி ரஷீத் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய இராணுவத்தின் 4 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். பொது மக்களில் ஒருவரும் பலியாகியுள்ளார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதி என்பது, கடந்த 14ஆம் திகதி சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் மீது தீவிரவாதி தற்கொலைத்தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள பகுதியாகும்.

கம்ரானை கடந்த பல ஆண்டுகளாகவே இராணுவம் தேடி வந்தது. ஆனால், கிராமம் கிராமமாக இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இளைஞர்களை தீவிரவாதிகள் பக்கம் இழுக்கும் வேலையில் கம்ரான் ஈடுபட்டு வந்ததால், பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், இப்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 12 மணி நேரங்களாக காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அதிரடி வேட்டை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.