வவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!!

726


அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (23.02) வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது.

ஆசிரிய மாணவி எம்.அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார்.



வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த அமைதிக் கல்வித்திட்டத்தின் இறுதி நாளான இன்று அவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்களில் ஆசிரிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற நூறு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.



நிகழ்வில் ஆசிரிய மாணவர்களால் குழுப்பாடல், நாடகம் மற்றும் விரிவுரையாளர் ந.பார்தீபன் தலைமையில் அமைதி குறித்த பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெற்றது.



நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா
அமைதி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத அளவுக்கு தமிழ் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அமைதி என்பது யுத்தம் இல்லாத நிலையல்ல, அது ஆயுதம் தாங்கியவர்களை பொறுத்தவரையிலே யுத்தம் இல்லாத சூழல் எமது மூதாதையர் சொத்தாக விட்டுச் சென்ற அமைதியை நாங்கள் இழந்துள்ளோம் என தெரிவித்தார்.


இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அமைதிக்கல்வித்திட்ட இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி. கீத்தா கரந்தவல, உப பீடாதிபதிகளான எஸ்.பரமானந்தம், பொ.சத்தியநாதன், விரிவுரையாளர்களான திருமதி நி.அரவிந்தன், திருமதி அ.இரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.