வவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’!!

619

தமிழ் மாருதம் 2019

கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கி வரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான தமிழ் மாருதம், இவ் ஆண்டு ‘தொலைத்தவை, தொலைத்துக்கொண்டிருப்பவை, தொலைக்கப்போவன’ எனும் கருப்பொருளில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எனும் வன்னியின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னியின் பண்பாட்டுப் பெருவிழாவாக மார்ச் மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இம்முறை தமிழகத்திலிருந்து பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியசுடர் த. இராமலிங்கம் அவர்களுடன், தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல பாகங்களிலிருந்து கலந்து கொள்ளும் கலைஞர்கள் ஒன்றிணைவில், இலக்கியம், சமூகம், அரசியல் என பல்துறை சார்ந்த இயல் இசை நாடக நிகழ்வுகளை உள்ளடக்கி விழா சிறப்பாக அரக்கேறவுள்ளது.

மார்ச் 9ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தை வந்தடைந்து தமிழ் மாருதம் 2019 இன் முதல் நாள் காலை அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இவ் அமர்வில் சண்முகதாஸ் ஐங்கரன், கஜேந்திரன் குழுவினரின் நாதச்சங்கம் , தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் அவர்களின் ‘குன்றென நிமிர்ந்து நில்’ எனும் பொருளிலான சிறப்புரை, திருமதி ஜஸ்மினி சிவகுமாரன் அவர்களின் நெறியாள்கையில் முல்லைத்தீவு வற்றாப்பளை மகாவித்தியாலயத்தைச்சேர்ந்த அன்ரன் ஜெகன் ஜனார்த்தனனின் தனி நடனம் ,

செல்வி கிருபனா லக்ஷ்மிகாந்தன் அவர்களின் நெறியாள்கையின் கீழ் முல்லைத்தீவு முத்து ஐயன் கட்டு வலதுகரை மகா வித்தியாலய மாணவர்களின் கிராமியப்பாடல், ஆகிய நிகழ்வுகளுடன் முத்து ஐயன் கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் திரு சி.நாகேந்திரராசா அவர்களின் தலைமையில், ‘ஒழுக்க மீறல்கள்-விழுமிய பிறழ்வுகளுக்காக குற்றவாளிக்கூண்டுகளில் ஏற்றப்படும் மாணவர் சமூகம் தலைகுனிய வேண்டியமைக்கு முதன்மைக்காரணம் எது?’ என ஆராயும் விவாத அரங்கும் நடைபெற உள்ளது.

இவ் விவாத அரங்கில் ‘சமூக வலைத்தளங்களில் புகுந்து கொண்ட கற்போன்!’ என தி.திவானிகா , செ.சுஜின்நிலாநிதன், இ.கவிப்பிரியா ஆகியோரும், ‘சட்டக்கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் கண்டிப்பான கற்பிப்போன்!’ என சா.சர்மிளா , சி.சிலோஜன், ம.வேஜின்கனிலா ஆகியோரும் விவாதிக்கவுள்ளனர்.

அத்துடன் வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் நடாத்தப்பட்ட ‘வன்னியின் வாசத்சமர் 2018’ எனும் விவாதப்போட்டியின் வெற்றியாளர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் முதல் நாள் மாலை அமர்வில் ‘முறைப்புக்கு மூப்பிளமை இல” எனும் பொருளில் அமைந்த வில்லுப்பாட்டு , திருமதி வி. சசிரேகா அவர்களின் நெறியாள்கையில் வவுனியா திருஞானசம்மந்தர் வித்தியாலய மாணவர்களின் ‘மண்வாசம்’ எனும் கிராமிய நடன நிகழ்வு,

நா.செந்தூர்ச்செல்வன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவர்களின் ‘ஈழக்கோன்’ புதிய ஆடலரங்கு , கலைநிலா கலையகம் வழங்கும் ‘கரும்புறாக்கள்’ நாடகம் ஆகிய நிகழ்வுகளுடன் சிறப்பு அரங்காய் சமூக ஆர்வலர் பொ.ந.சிங்கம் அவர்களை சபாநாயகராகவும், தமிழ் மாமன்றத்தின் உப தலைவர் ஜெ.கோபிநாத் அவர்களை அவைத்தலைவராக் கொண்ட பாரளுமன்ற அமர்வு நடைபெற இருக்கிறது.

இவ் அமர்வில் ‘இவ் அவை கடந்த ஒரு தசாப்த காலத்தில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுகளை தவறவிட்ட தமிழ்த்தலைமைகளை கண்டிக்கிறது’ எனும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவிருக்கிறது.

இவ் அமர்வில், அரச தரப்பில் ஜெரா , ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ, சி.மேகலாதரன் ஆகியோரும், எதிர்த் தரப்பில் கு.புரந்தரன் , பா.ரஜீவன் , மெ.சாருஜன் ஆகியோரும் அங்கத்துவம் வகிக்க உள்ளனர்.

இரண்டாம் நாள் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு 9 மணிக்கு ஆரம்பமாகும். திருமதி ம.கனகரத்தினம் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா வாத்திய கலாலய மாணவர்கள் வழங்கும் பல்லிய வாத்திய நிகழ்வு, திருமதி புவனரூபி குகதாசன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா பரதநர்த்தனாலய மாணவர்களின் ‘கிராமிய சங்கமம்’ எனும் நடன நிகழ்வு,

பொ. சத்தியநாதன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா கல்வியற்கல்லூரி மாணவர்களின் ‘ஏகலைவன்’ எனும் புத்தாக்க நாடகம் , திரு.விஸ்ணுராஜ் விஜயகுமார் அவர்களின் நெறியாள்கையின் கீழ் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் ‘இராவணேசன்’ எனும் கூத்து ஆகிய நிகழ்வுகளுடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்களின் தலைமையில் ‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறிலும் – தமிழினத்தின் பீடு’ எது என ஆராய இருக்கும் சுழலும் சொற்போர் களம் காண இருக்கிறது.

இப் போரில் ‘ஊழி கடந்தும் ஓய்ந்துபோகாத எம்குடி’ என கஜிதா வரதராசா, ‘ஆழி கடந்து துடிக்கும் தமிழக நட்பு’ என சுந்தரலிங்கம் செந்தூரன், ‘கூழ் வளமாய் நிலைகொண்ட கல்வி’ என நிதர்சனா விதுர்சனன், ‘அரணென வாக்கிறைஞ்சும் அபிவிருத்தி நேசர்கள்’ என பாலகிருஸ்ணன் லோஜன், ‘தேய்ந்து போனாலும் மீந்து கிடக்கும் மதிநுட்பம்’ என கிறிஸ்ரீனா இராமசாமி, ‘சாம்பர் மீதினில் மீண்டெழும் இளைஞர் படை’ என குமாரகுலசிங்கம் சங்கீதன் ஆகியோர் தம் சொல் கொண்டு நம் நிலைமை சொல்லி சூடான கணைகள் கொண்டு களமாடவிருக்கிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் நிறைவரங்கில் பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களின் தலைமையில் ‘தனது வீழ்ச்சியால் நமது இரக்கத்தை பெரிதும் வென்றவர்’ என்ற தலைப்பிலான இலக்கியப்பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

இப் பட்டிமன்றத்தில் ‘தசரதனே!’ என ஜெ.திருவரங்கன் , தெ.துர்க்காயினி ஆகியோரும், ‘வாலியே!’ என சி.துஷாரன் த.திருமாறன் ஆகியோரும், ‘இராவணனே !’ என சி.கிருபானந்தகுமாரன், ஜெசிதா ஆனந்தமூர்த்தி ஆகியோரும் பேசவுள்ளனர்.

தொடர்ந்து நானாட்டான் கார்மேல் அன்னை கலாமன்றம் வழங்கும் ‘உயிரையுமீந்தான் பாரிவள்ளல்’ எனும் கூத்து இடம் பெறவுள்ளது.

தமிழ் மாருதம் 2019 இன் நிறைவு நிகழ்வாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கவிஞர் ச.முகுந்தன் அவர்களின் தலைமையில் ‘ஊரிழந்து போதலின் துயரப்படிமங்கள்’ எனும் நம் துயரம் சொல்லும் இயல்புநிலையை படம்போட்டுக்காட்டும் சிறப்புக் கவியரங்கம் இடம்பெறவுள்ளது.

இக் கவியரங்கில், ‘ஆதிக்குடிகளின் வீதிகளிலமரும் போதிமாதவன்’ என வி.விமலாதித்தன், ‘மணலாறள்ளித்தின்று மாங்குளங்கடக்கும் மகாவலி’ என பா.திலீபன், ‘வெடுக்குநாறி மலையுறையும் ஆதி சிவன்’ என எஸ்.தவபாலன், ‘தொழுதேத்தித் துணைபோகும் பணநாயகம்’ என ந.அகிலன், ‘உழுதலொழித்து உலகமயமாகிய உள்ளுர்ப்பொருண்மியம்’ என ச.கஜன், ‘கட்டறுத்துச்சிதறி வெட்டச்சுலபமான தேசியம்’ என செ.மதுரகன் ஆகியோர் கவி பாடவுள்ளனர். இவ் அனல்பறக்கும் கவியரங்கோடு வன்னியின் மாபெரும் பண்பாட்டுவிழா தமிழ்மாருதம் பெருமையுடன் நிறைவடையும்.

அத்துடன் இரு தினங்களும் இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும் , மலிவு விற்பனையும் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலக்கியம், சமகால சமூக அரசியல் என் பல்துறை சார்ந்து பேசவிருக்கின்ற, இவ் முத்தமிழ்ச் சங்கம நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கிறது தமிழ் மாமன்றம்.

‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’.

வவுனியா இளைஞர்களின் அயராத முயற்சியில் வவுனியாவில் வரலாறு படைக்கவுள்ள ‘தமிழ் மாருதம் 2019’ மாபெரும் வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.