வவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி!!

467

விழிப்புணர்வுப் பேரணி

வவுனியா மாவட்ட செயலகமும் சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் இணைந்து நடாத்திய பிள்ளை யாருடையது என்பதல்ல எவருடையதாயினும் அது பிள்ளை எனவே பாசத்துடன் பாதுகாப்போம் ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி இன்று (08.03.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகி காலை 9.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தினை சென்றடைந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் முஹமட் ஹனீபா ஏற்றி வைத்ததுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட செயலகத்திற்கு முன் பாதை வழியாக ஏ9 வீதியினை சென்றடைந்து ஏ9 வீதியூடாக புதிய பேருந்து நிலையத்தினை சென்றடைந்தது.

புதிய பேரூந்து நிலையத்தில் வரவேற்புரையினை உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன் வழங்கியதுடன் தலைமையுரையினை மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமார் வழங்கினார் .

அதன் பின்னர் சிறப்புச்சொற்பொழிவு, கருத்துரை, அரசாங்க அதிபர் உரை என பலரின் கருத்துரைகள் இடம்பெற்றதுடன் வவுனியா பிரதேச கலாசார பிரிவினரின் நாமே உளிகள் நெறியாள்கை நாடகம் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் பேரூந்துகளில் ஒட்டப்பட்டதுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1997 ஆண்டு மாணவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பொலிஸார் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.