இந்திய அணியின் ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா : நான்கு ஆண்டுகளுக்கு பின் கோப்பையை இழந்த கோஹ்லி படை!!

472


ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா



இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.



இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.




உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 76 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, பின்ச் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. 102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார்.


சதம் அடித்த அவர் 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு இணையாக ஆடிய ஹேண்ஸ்ட்காம்ப் 52 ஓட்டங்களில் வெளியேற, அவுஸ்திரேலிய அணி இறுதியில், 9 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

அதன் பின் 273 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா-ஷிகர் தவான் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். அப்போது தவான் 12 ஓட்டங்களிலே வெளியேறி, இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்க, அடுத்து இறங்கிய விராட் கோஹ்லி 20 ஓட்டங்களிலும் ரிஷப் பந்த் 16 ஓட்டங்களிலும், விஜயசங்கர் 16 ஓட்டங்களிலும் என அடுத்தடுத்து வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.


ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலு ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய கேதார் ஜாதவும், 7-வது விக்கெட்டுக்கு இறங்கிய புவனேஸ்வர் குமாரும் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடி 91 ஓட்டங்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 46 ரன்னிலும், கேதார் ஜாதவ் 44 ரன்னிலும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது.

இறுதியில், இந்தியா 237 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்ததால் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம், அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 3 – 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 ஆண்டுகளாக கோப்பையை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் தோல்வி மூலம் தற்போது கோப்பை அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிறது.

இந்திய மண்ணில் தொடர்ந்து ஆட்டம் காட்டி வந்த இந்திய அணியின் ஆட்டத்தையும் அவுஸ்திரேலியா அடக்கியுள்ளது.