தமிழகத்தையே உலுக்கிய காதல் ஜோடி கொலை வழக்கு : நீதிமன்றம் அதிரடி!!

520


காதல் ஜோடி கொலை வழக்கு



தேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு, காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.



ஆரம்பத்தில் இந்த வழக்கினை விசாரித்த பொலிஸார் தற்கொலை என முடிக்க நினைத்தனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் தொடர் அழுத்தத்தினால், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளபட்டது.




அதிலும் முன்னேற்றம் ஏற்படாததால், எழில் தரப்பினரால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தான் கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காட்டுப்பகுதியில் இருந்த காதல் ஜோடியிடம் பணம் கேட்டு பறித்துள்ளார். அதன்பிறகு கஸ்தூரியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.


இதனை தடுக்க முயன்ற எழிலை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிக்க முயன்ற கஸ்தூரியையும் காலில் வெட்டியுள்ளார். பின்னர் கீழே விழுந்தவரின் முதுகில் வெட்டி, ரத்தவெள்ளத்துடனே கஸ்தூரியை துஸ்பிரயோகம் செய்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இந்த வழக்கானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது குற்றவாளிக்கு, 7வருட கடுங்காவல் தண்டனை, ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


இந்த நிலையில் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மதுரைக்கிளை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.