வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரு பொலிசாருக்கு திடீர் இடமாற்றம் : நடந்தது என்ன?

941


இரு பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்



வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்தன உட்பட இரு பொலிஸாருக்கு நேற்றையதினம் (17.03.2019) பொலிஸ் தலைமை காரியாலயத்தினால் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.



வவுனியா பூப்புகார் மயானத்திற்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மதுஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நேற்று முன்தினம் (16.03.2019), இரவு 11மணியளவில் அலவாங்கு , மண்வெட்டி, கோடாலியுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த 32, 35, 43, 48, 54 வயதுடைய ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.




கைது செய்யப்பட்ட நபர்களின் கையடக்க தொலைபேசியினை சோதனையிட்ட சமயத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.


அத்துடன் இவர்கள் புதையல் தோண்ட முற்பட்ட சமயத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சார்ஜன் ஒருவரும் சம்பவ இடத்திற்கு அருகே காவலில் நின்றமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் விசாரணையின் நிமித்தம் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தினால் நேற்றையதினம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் சார்ஜனுக்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.