வவுனியாவில் திரிபீடக வந்தனா வாரம் அனுஸ்டிப்பு!!

401

திரிபீடக வந்தனா வாரம்

தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான திரிபீடக வந்தனா வாரம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக கடந்த 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திரிபீடக வந்தனா (புனித திரிபீடக) வாரமாக நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், புத்ததாசன அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன ஏனைய அமைச்சுகள்களுடன் இணைந்து இந்த திரிபீடக வந்தனா வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.

இவ்வாரம் முழுவதும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இல்லங்கள், வாகனங்கள், வீதிகள் எங்கும் பௌத்த கொடியினை காட்சிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளிலும் வீதிகளில் பௌத்த கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரச திணைக்களங்கள், இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையம் என்பவற்றிலும் பௌத்த கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேரவாத திரிபீடகத்தினை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ தாபனத்திற்கு உலக அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்மொழிவினை சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் மூன்று நிக்காயக்களின் மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் முன்னிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலில் எதிர்வரும் 23 ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.