வவுனியாவில் வீட்டுத்திட்ட கடனில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

487

ஆர்ப்பாட்டம்

வவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தினர்.

வவுனியா பாரதிபுரத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தற்போது இவ்வீட்டுத் திட்டங்களிற்கான நிதியானது சீரான முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (22.03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வீடமைப்பு அதிகார சபையே நுண்கடன் போல் பாதிக்கப்பட்டோம் உன் வீட்டுத்திட்டத்தால், சஜித் அமைச்சரே வீட்டுத்திட்ட கடனில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள், ஐந்து இலட்சம் தந்து விட்டு கடனாளி ஆக்கி வங்கிப்புத்தகத்தையும் காணி அனுமதி பத்திரத்தையும் பறித்து விட்டாயே என பல்வேறு வாசகங்களை எழுதியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர், ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடுத்த கட்ட நிதிகள் இதுவரை வழங்கப்படாமையினால் எமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளோம்.

மேலும் 2018ம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டட பொருடகளின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளமையினால் குறித்த ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதுடன், நாம் தற்போது மேலும் கடனாளியாகியுள்ளோம் என தெரிவித்தனர்.