வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அசமந்தப்போக்கு : மக்கள் சிரமம்!!

535


மக்கள் சிரமம்



வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரின் அசமந்த போக்கினால் மணிபுரம் முனியப்பர் வீதியில் குடியுள்ள மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிரமக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.



வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட மணிபுரம் முனியப்பர் வீதியினை செப்பனிடும் பணி ‘கம்பெரலிய’ என்ற கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டு வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத வகையில் பெருமளவு கிரவல் மண் கொட்டப்பட்டுள்ளது.




குறித்த வீதியினை திருத்துவதாக தெரிவித்து வீதியின் நடுவே பெருமளவு கிரவல் மண் கொட்டப்பட்டுள்ளமையினால் 20 நாட்களாக அவ்வீதியூடாக துவிச்சகரவண்டியில் கூட போக்குவரத்தை மேற்கொள்வதில் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


வீதியால் சென்று வரும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டுள்ளதுடன் அவசர தேவையின் நிமித்தம் வாகனத்தில் சென்று வருவதற்கு பெரும் தடையாகவுள்ளது.

எனவே இந்த வீதி புனரமைப்புக்களை மேற்கொண்டு வருபவர்கள் பொதுமக்களின் அவசர தேவைகளைக் கருத்தில் கொண்டு வீதியில் போடப்பட்டுள்ள கிரவலை அகற்றி அப்பகுதி மக்களின் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களிடம் பொதுமக்கள் தெரிவித்திருந்த போதிலும் மணிபுரம் பின்தங்கிய கிராமமாக காணப்படுவதினால் அவர்களின் கோரிக்கையினை தவிசாளர் செவிமடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களிடம் ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு வினவிய போது , கடந்த 20 நாட்களாக அவ் வீதியில் போக்குவரத்து இடையூரான முறையில் மண் குவிக்கப்பட்டுமையினையிட்டு மனவருந்துகின்றேன். கிரவல் மண் தட்டுப்பாட்டினாலேயே பல நாட்களாக வீதியினை செப்பனிட முடியவில்லை என தெரிவித்தார்.

இவ் வீதி வீதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரிய வீதி என்ற வகையில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இந்த செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது பிரதேச சபையின் கடமையாகும்.