வவுனியாவில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் 116 வீடுகள்!!

380

மீள்குடியேற்ற அமைச்சினால் 116 வீடுகள்

நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனால் குறித்த வீட்டுத் திட்டம் பிரதேச செயலகத்தின் சிபாரிசிற்கு இணங்க வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்து மீளகுடியேறிய நிலையில் நிரந்தர வீடு இன்றி தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் இருந்த தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கே குறித்த வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பட்டக்காடு, வேப்பங்குளம், பட்டானிச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 தமிழ் குடும்பங்களுக்கும், 66 முஸ்லிம் குடும்பங்களுக்குமாக முதல்கட்டமாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த வீட்டுத்திட்டத்திற்கான கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வவுனியா நகர இணைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அப்துல்பாரி, வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.லரீப் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

அத்துடன், குகன் நகர், வின்சன் கோட்டம் போன்ற தமிழ் கிராமங்களில் காணிப்பிணக்குகள் காணப்படுவதானால் அவை தீர்த்து வைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கும் உடனடியாக வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் தமது உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக குறித்த வீட்டுத்திட்டங்களை அமைச்சர் ஊடாக பெற்றுக் கொடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.