வவுனியா நகரசபையின் முடிவை உதாசீனப்படுத்திவரும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை!!

358

தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை

வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்றயதினம் நடைபெற்றது. இதன்போது நகரசபையினால் அறிவித்தல் வழங்கபட்டும் பல தனியார்கல்வி நிலையங்கள் மாலை 7 மணிக்கு பின்னரும் கல்விசெயற்பாடுகளை மேற்கொள்வதாக சபையின் உறுப்பினர்கள் பலர் குற்றம்சாட்டியிருந்ததுடன் அவ்வாறான கல்விநிலையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரிடம் தெரிவித்திருந்தனர்.

போதிய வளங்கள் கிடைக்காத பட்சத்தில் கல்வியை தேடிக் கற்பதற்கு மாணவர்களிற்கு உரிமைஇருக்கிறது என்று உறுப்பினர் காண்டீபன் தெரிவித்ததுடன் அதற்கு சட்டநடிவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராயவேண்டும் என்றார்.

இதேவேளை இரவு நேரங்களில் கல்விநிலையங்கள் நடாத்தபடுவதால் மாணவிகளிற்கும் பாதுகாப்பில்லாதநிலை உருவாகியுள்ளது. அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் இந்த சபைக்கு பொறுப்பு இருக்கிறது என சில உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் பாடசாலைகளில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களில் கற்பிக்கமுடியாது என சட்டத்தில் உள்ளது. எனவே நீங்கள் சட்டநடவடிக்கையை எடுங்கள் என்று உறுப்பினர் செந்தில்ரூபன் தவிசாளரிடம் தெரிவித்தார்.

ஓரு ஜனநாயக தன்மையை பேணுவதற்காகவே தனியார் கல்வி நிலையம் நடாத்துபவர்களை நாம் நேரில் அழைத்து கலந்துரையாடியிருந்தோம். அவர்களிற்கு பல விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தியிருந்தோம். எனினும் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தாத நிலை காணப்படுகின்றது.

எனவே உள்ளுராட்சி அமைப்பொன்றில் எடுக்கபட்ட தீர்மானத்தினை உதாசீனம் செய்வதை கருத்தில்கொண்டு இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கைக்கு நேரடியாக செல்லவுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.