அவதூறு செய்தி : நடிகை குத்து ரம்யாவுக்கு 50 லட்சம்!!

359

தமிழில் குத்துப்படம் மூலம் பிரலமான நடிகை ரம்யா என்றழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தொலைகாட்சி நிறுவனங்கள் அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல கன்னட நடிகையுமான திவ்யா ஸ்பந்தானவுக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக ஏசியாநெட் நியூஸ் மற்றும் சுவர்ணா நியூஸ் சேனல்கள் 2013ம் ஆண்டு மே 31ம் திகதி செய்தி வெளியிட்டனர்.

குறித்த அவதூறு செய்திக்கு எதிராக பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் திவ்யா ஸ்பந்தனா வழக்கு தொடர்ந்தார். மேலும், தவறான செய்தி வெளியிட்டதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தனது மனுவில் திவ்யா ஸ்பந்தனா குறிப்பிட்டார்.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான செய்தியில் திவ்யா ஸ்பந்தனா குறித்து எந்த வகையிலும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தூதராக திவ்யா இருந்திருந்தாலும், 2013-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். எனவே, திவ்யா ஸ்பந்தனா சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.

ஊடகங்கள் இதழியல் நெறிகளை மீறிவிட்டன. அவருடைய புகழுக்குக் களங்கம் விளைவித்துள்ளன. இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இனியும் ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற செய்திகளை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.