வவுனியாவில் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!!

1090

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமுர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்டு 4.40 மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு விமானத்தில் வந்திறங்கிய அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக கண்டி வீதி வழியாக செல்லாமல் பிரதான மணிக்கூட்டு வீதி வழியாக பசார் வீதி சென்று இலுப்பையடி, வைத்தியசாலைச்சுற்றுவட்டம் ஊடாக நகரசபை மைதானத்தினை வந்தடைந்தார்.

4.40 மணியளவில் போராட்டத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது பிள்ளைகளின் விடுதலைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் தமக்கு வாய்க்கரசி போடவருகின்றாயா என்று கோசமெழுப்பியவாறு தமது போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதியை வழிமறிக்கச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை பொலிசார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியிளித்துவிட்டு தற்போது ஆட்சிக்காலம் நிறைவுறும் தருணத்திற்குச் சென்றுள்ள நிலையில் அரசாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

போராட்ட களத்தினைச் சுற்றி பொலிசார் பாதுகாப்புக்கடமையை மேற்கொண்டனர். முன்னோக்கிச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்திய பொலிசார் போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராட்சி போராட்டத்தின் காரணத்தைக் கேட்டறிந்தபோது ஜனாதிபதியுடன் நிற்கும் தமது பிள்ளைகளையும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கும் தீர்வு எங்கே என்று கோசமெழுப்பியிருந்தனர்.

இன்றுடன் 841ஆவது நாட்களாக வவுனியாவில் போராட்ட களத்தில் சுழற்சி முறையான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்றைய சமுர்த்தி நிகழ்வு திட்டமிடப்பட்டவாறு எளிமையான முறையில் இடம்பெற்றுள்ளது.