வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி கதறி அழுத பெண்கள் : மயங்கி விழுந்த சோகம்!!

465


கதறி அழுத பெண்கள்



வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி இன்று (10.06.2019) காலை 10.30 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் மற்றும் சமயபுரம் நாவலர் வீதி பகுதியினை சேர்ந்த கிராம மக்கள் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக தங்களுக்கு வீட்டுத்திட்டம் தருமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.




போராட்ட இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையின் உபதலைவர் மகேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொலைபேசியில் உரையாடினர்.


அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எ.கிருபாசுதன் மற்றும் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவி மாவட்ட முகாமையாளர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராமத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் போராட்ட இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கலந்துரையாடினர்.


விரைவில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்த போதிலும் தங்களது வீட்டினை தற்போது வந்து பார்வையிட்டு தீர்வு பெற்றுத்தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்து வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் குறித்த அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் அவர்களது வீட்டினை பார்வையிடச் சென்றனர்.

வவுனியா சமயபுரம் நாவலர் வீதியில் வசிக்கும் 15 குடும்பத்தினரும் கணேசபுரத்தில் வசிக்கும் 25 குடும்பங்களே வீட்டுத்திட்டம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.