கொச்சிக்கடையில் வேதனை தரும் வரலாற்று சின்னமாக மாறும் தடயம்!!

276

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து செல்ல முடியாது.

எண்ணற்ற உயிர்களை குறித்த தாக்குதல்கள் பலியெடுத்ததுடன் மனதில் இருந்து அகழா நிரந்த துன்பத்தையும் எமக்கு தந்து விட்டுதான் சென்றிருக்கின்றது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பெருமளவானோர் படுகாயமடைந்து இன்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே சமயம் இந்த தாக்குதல் அரசியல் ரீதியிலும் பாரிய மாற்றங்களை விளைவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் குறித்த ஆலயம் மீள் கட்டுமானத்திற்கு உட்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் மீளவும் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆலயத்தின் பல பகுதிகளும் சீர் செய்யப்பட்டாலும் தற்கொலை குண்டுதாரி நின்று வெடிகுண்டினை வெடிக்கச் செய்த அந்த ஒரு இடம் மாத்திரம் சீரமைக்கப்படாமல் அவ்வாறே விடப்பட்டுள்ளது.

சிறு சிறு துளைகளுடன் காணப்படும் அந்த இடத்தை பார்க்கும் அனைவருக்கும் இலங்கையை உலுக்கிய அந்த கோரச் சம்பவம் நினைவிற்கு வந்து செல்லும். பாரிய அழிவு ஒன்றின் சாட்சியமாக வேதனை தரும் வரலாற்றுச் சின்னமாக இந்த இடம் மாற்றம் பெறுகின்றது.