எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வலுக்கும் பதற்றம்!!

282


வலுக்கும் பதற்றம்



ஓமான் வளைகுடாவில் எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஈரான் தெரிவித்திருக்கும் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். ஓமான் வளைகுடா பகுதியில் நோர்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



ஓமான் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நங்கூரமிட்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்களை குறி வைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.




இந்நிலையில், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே மேற்கொண்டதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா, அது குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. எனினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்திருந்ததுடன், அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக ஈரான் கூறியுள்ளது.


இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறாயினும், ஈரான் தெரிவித்திருக்கும் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். மேலும், சிறிய படகில் வந்த ஈரானிய படையினர் வெடிக்காத குண்டுகளை கப்பலுக்கு அருகில் வந்து சேகரிப்பது போலான காணொளியை அமெரிக்கா வெளியிட்டிருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் நிலவி வருகின்றன. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் ஈரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.


2018ஆம் ஆண்டு ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இந்த நடவடிக்கை பல நாடுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் கூட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.

மே மாதம் டிரம்ப், ஈரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்து கொள்வதாக ஈரான் தெரிவித்தது.