தனது இரு பிள்ளைகளுடன் இளம் தமிழ் பெண் தற்கொலை : தாயார் வெளியிட்ட தகவல்!!

519

தமிழ் பெண் தற்கொலை

அண்மையில் தனது இரு பிள்ளைகளுடன் இளம் தாய் ஒருவர் கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத காரணத்தினாலேயே, அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் மரண விசாரணையின் போது தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலில் இருந்து குதித்து இளம் பெண் ஒருவரும், அவரின் இரு பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டனர். கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்பவரே இவ்வாறு தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் மரண வாக்குமூலம் வழங்கியபோது,

“தனது மூத்தமகளாகிய ஜெனிட்டா தர்ஷினி அவளது முதல் மகனுக்கு 6 மாதம் இருக்கும் போது அவருடைய கணவருடன் வெளிநாடு சென்றார். பின் விசா பிரச்சினையின் காரணமாக அவர் பிள்ளைகள் இருவருடன் நாடு திரும்பினார். எனினும், நாடு திரும்பிய அவர் பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக முயற்சி செய்து வந்தார். பிள்ளைகள் வெளிநாட்டில் ஆங்கில மொழியில் கற்றதினால் இங்கு பாடசாலையில் சேர்ப்பதற்கு சிக்கலாக இருந்தது.

உரிய ஆவணங்களும் இருக்கவில்லை. பிள்ளைகள் ஆரம்ப கல்வியை ஆங்கிலத்தில் பெற்றிருந்ததனால் சர்வதேச பாடசாலையில் சேர்க்க வேண்டிய நிலைஏற்பட்டது. இதற்காக பல சர்வதேச பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்றகாக அவர் முயற்சி செய்து வந்தார்.

சம்பவ தினத்தற்கு முன், அதாவது கடந்த 13ம் திகதி வியாழக்கிழமையும் பாடசாலையொன்றில் அனுமதி கேட்பதற்கு சென்ற போது பெருந்தொகையான பணம் கேட்கப்பட்டது. இதன்போது நான் மகளுக்கு உதவுவதாக கூறினேன்.

பின் மறுநாள் காலை நான் இனிமேல் உங்களுக்கு சுமையாக இருக்கமாட்டேன் அம்மா என்று மகள் கூறினார். பின்னர் பிள்ளைகளுடன் தேவாலயத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இதன் பின்னரே பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாய் தனது மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.