பிரபல தமிழ் சிறுமி ஜோதிக்கு பிரித்தானியாவில் அனுமதி மறுப்பு!!

276

சிறுமி ஜோதி

இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பிரித்தானியா செல்லவிருந்த மாற்றுத்திறனாளியான பாடகி ஜோதிக்கு உள்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. 19 வயதான வயலின் கலைஞர் ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம் பகவன் நாகராஜு ஆகியோர், ஸ்காட்டிஷ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோவை தளமாகக் கொண்ட பாராகன் மியூசிக் நடனம் மற்றும் இசை தொண்டு நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்து கலைநிகழ்ச்சி நடத்தியிருந்தது. அதன் கலாச்சார பரிமாற்றமாகாவே தற்போது மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் சென்னை அமைப்பான தேவசிதம் அறக்கட்டளையை சேர்ந்த குழுவினர், பிரித்தானியாவில் கலைநிகழ்ச்சி நடத்தவிருந்தனர்.

இதற்காக விண்ணப்பிக்கப்பட்ட இரண்டு வார விசா, ஜோதி அவருடைய தாய் கலைச்செல்வி மற்றும் பிரேம் ஆகியோரை தவிர மற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள உள்துறை அமைச்சகம். “இந்தியாவில் இருவருக்கும் போதுமான உறவுகள் இருப்பதாக தெரியவில்லை. அதாவது அவர்கள் பயணத்தின் முடிவில் இங்கிலாந்தை விட்டு வெளியேற மாட்டார்கள்” என தாங்கள் நம்புவதாக கூறியுள்ளனர்.

உள்துறை அலுவலகத்தின் இந்த நடவடிக்கையால் அந்த தொண்டு நிறுவனம் கொதித்தெழுந்துள்ளது. ஸ்காட்டிஷ் எம்.பி. டீட்ரே ப்ராக் ட்விட்டரில் தன்னுடைய கோபம் குறித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் நினியன் பெர்ரி கூறுகையில், இந்த சம்பவத்தினால் ஜோதி கண்ணீரில் மூழ்கிவிட்டார். சென்னையில் இருக்கும் அவருடைய நண்பர்கள் அனைவரும் சோகமாக உள்ளனர். இந்த நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது. இதற்காக நாங்கள் 8000 பவுண்டுகள் வரை செலவு செய்துள்ளோம்.

மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் சென்னை அமைப்பான தேவசிதம் அறக்கட்டளையை சேர்ந்த குழுவினர், சென்னையிலிருந்து, சனிக்கிழமையன்று பிரித்தானியாவிற்கு வரவிருந்தனர். ஆனால் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்துறை அலுவலகம் பயன்படுத்திய சுயவிவரக் கருவி முற்றிலும் பாரபட்சமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு விசா வழங்கப்படுகிறது. ஆனால் பார்வையற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்கிற தர்க்கத்தைப் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும், இதற்காக நாங்கள் கையெழுத்து திட்டத்தினை துவங்கியுள்ளோம். தற்போது வரை 470 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆயிரம் கையெழுத்துக்கள் கிடைத்தால், உள்துறை அமைச்சத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என கூறியுள்ளார்.

முன்னதாக சிறுமி ஜோதி, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் “அடங்காதே” படத்தில் பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது