முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம் : கடற்கரை பிரதேசத்தின் கதை!!

474

முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது. கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் கடற்கரையை அண்மித்த ஓர் அழகிய கிராமமாகும். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அந்த பகுதி இன்றும், ஆள் நடமாட்டமற்ற பகுதியாகவே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடற்கரையை நோக்கி செல்லும் மணல் வீதி… தூரத்தில் இரு மருங்கிலும் பனை மரங்கள்… பனை மரங்களுக்கு இடை நடுவில் கடற்கரை தென்படும் அழகிய காட்சி.

கடற்கரையை நோக்கி சென்றால், அங்கு ஆள் நடமாட்டம் என்பதை எம்மால் காண முடியவில்லை. சிறிய ரக மீன்பிடி படகுகள் மாத்திரம் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழிலாளர்களையும் எம்மால் காண முடியவில்லை.

எந்தவித அசுத்தமும் இன்றி, மிகவும் சுத்தமாக இந்த கடற்கரை காணப்படுவதை பார்த்த எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. பல கிலோமீற்றர் தொலைவிற்கு நேரான கடற்கரையை கொண்ட இந்த அழகிய முள்ளிவாய்க்கால் கடற்கரை, இன்றும் எந்தவொரு அதிகாரியின் கவனத்திற்கும் செல்லவில்லை.

குறிப்பாக சுற்றுலாத்துறையை இலங்கை பெயர் பெற்றுள்ள பின்னணியில், இவ்வாறான கடற்கரைகளை பிரசித்திப்படுத்துவதன் ஊடாக மேலும் சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியோ என்னவோ, அரசாங்கம் இந்த அழகிய கடற்கரையை வெளிகொணராது இருக்கின்றது.

முல்லைத்தீவு இலங்கையின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுகின்ற பின்னணியில், குறித்த கடற்கரை சுற்றுலாத்துறைக்கான திறக்கப்படும் பட்சத்தில், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னோற்றுவதற்கான இயலுமை கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியை மக்கள் பாவனைக்கு வழங்க முன்பாக, அந்த பகுதியில் பாதுகாப்பு பிரிவினரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை தீர்க்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

– BBC – Tamil