வவுனியாவில் பயணிகள் அவதி : ரயில்வே தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது!!

512

வவுனியாவில் பயணிகள் அவதி

ரயில்வே தொழிற்சங்கத்தினர் சம்பள பிரச்சினையை முன்வைத்து இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி மூன்று நாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் வேலை நிறுத்தம் காரணமாக வவுனியாவில் இருந்து கொழும்பு உள்ளிட்ட தென்பகுதிகளுக்கும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிக்கும் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தமது தேவைக்கு சிரமம் இல்லாமல் செல்லவேண்டும் என்பதற்க்காக ஆசனப்பதிவை முன் பதிவு செய்து வைத்திருந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதுடன், தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் தொடர் பணிபகிஷ்கரிப்பின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதம் சேவையில் ஈடுபடுகிறது. இதில் வவுனியாவில் இருந்து அதிகளவிலான மக்கள் பயணம் செய்வதை அவதானிக்க முடிகிறது.

குறித்த கடுகதி புகையிரதம் பயணிக்கும் காலை 10.30, மாலை 3.30 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதுடன் இராணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.