வவுனியாவில் யானைக்கு விஷேட வைத்தியரினால் சிகிச்சையளிப்பு!!

367


யானைக்கு  சிகிச்சையளிப்பு



வவுனியாவில் கடந்த வாரம் காட்டு யானை ஒன்று பாலமோட்டைப் பகுதி குளத்திற்கு அருகில் காணப்பட்ட நிலையில் பொதுமக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



எனினும் அந்த யானை காலில் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் காட்டுக்குச் செல்லாமல் திரும்பவும் பாலமோட்டை குளத்திற்கு அருகில் நேற்று முதல் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அனுராதபுரத்திலிருந்து வருகை தந்த விஷேட மிருக வைத்திய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டு காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.




கடந்த வாரம் பாலமோட்டை குளத்திற்கு அருகில் காணப்பட்ட காட்டு யானை ஒன்று கட்டுத்துவக்கு பயன்படுத்தப்பட்டு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் குளத்திற்கு அருகே பல நாட்களாக காணப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மிருக வைத்தியர் வருகை தந்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் திரும்பவும் நேற்று அப்பகுதிக்குச் சென்றுள்ளதை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். நேற்று காலை அனுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை வைத்திய அதிகாரி சந்தன ஜெயசிங்க தலைமையில் சென்ற விஷேட வைத்திய குழுவினர்,

வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைக்கு அருகே சென்று யானையின் உடல் நிலையை பார்வையிட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 35 வயதுடைய குறித்த யானை எட்டு அடி உயரமாக காணப்பட்டுள்ளது.


இதன்போது கட்டுத்துவக்கு பயன்படுத்தப்பட்டு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி வைத்தியர் யானைக்கு விறைப்பு மருந்து உட்செலுத்தி மூன்று மணிநேர தீவிர வைத்திய சிகிச்சையின் பின்னர் யானை திரும்பவும் காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.