வவுனியாவில் போதையற்ற தேசத்தினை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி!!📷வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற தேசம்” என்ற விழிப்புணர்வுப் பேரணி வவுனியா குருமன்காட்டில் இன்று (28.06.2019) இடம்பெற்றது.

போதையற்ற தேசமாக நம் நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஒர் அங்கமாக இவ் விழிப்புணர்வுப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போதையற்ற தேசம் தொடர்பான விருந்தினர்களின் விழிப்புணர்வு உரை இடம்பெற்றிருந்ததுடன் விருந்தினர்களினால் “நாம் போதைப் பொருட்களுக்கு எதிரானவர்கள் போதையற்ற தேசத்தை நேசிப்பவர்கள்” என்ற வாசகம் தாக்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டது. அத்துடன் வாகனங்களிலும் குறித்த வாசகம் தாக்கிய ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டன.

அதன் பின்னர் குருமன்காட்டு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய விழிப்புணர்வுப் பேரணி மன்னார் வீதியூடாக வைரவர் கோவில் வீதியினை சென்றடைந்து வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தினை சென்றடைந்தது.அதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு ‘போதையற்ற தேசம்’ தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனிபா கலந்துகொண்டதோடு செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன், வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர், பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், மூன்றாம் நிலை கற்கை நெறி கல்லூரி மாணவர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.