எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சானு, நாங்களே கிள்ளிப் பார்த்துக்கிறோம் : தாபா – ரகு ஷேரிங்ஸ்!!

758


தாபா – ரகு ஷேரிங்ஸ்



ஆதித்யா சனலின் தொகுப்பாளினி தாபாவும், அவரது கணவர் ரகுவும் தங்களது திருமண நிகழ்வுகள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்கள். “எங்களுக்குக் கல்யாணம் நடந்து முடிச்சிருச்சனானு எனக்கு ஆச்சரியமா இருக்கு. அப்பப்போ, நாங்களே கிள்ளிப் பார்த்துப்போம். ஏன்னா, எங்களுக்குத் திருமணம் நடந்தை எங்களாலேயே நம்ப முடியல” எனப் பேச்சைத் தொடங்குகிறார்கள் புதுமணத் தம்பதிகள் தாபா – ரகு.



”என் வீட்டுக்காரர் ரகு, உதவி நடன இயக்குநர். நான் டான்ஸ் கிளாஸுக்குப் போனப்போ, இவர்கூட எனக்குப் பழக்கம். எனக்கு இவரைப் பிடிச்சதுக்குக் காரணம், எங்க அப்பா மாதிரி இவர் என்னைப் பார்த்துக்கிட்டார்.” என தாபா தொடங்கிவைக்க, ரகு தொடர்ந்தார்.




”எனக்கும் இவங்களுடைய கேரிங் ரொம்பப் பிடிச்சிருந்தது. என்கூட பத்து வருடங்களாக டிராவல் பண்றாங்க. என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்குவாங்க. அதனாலதான் இவங்களை மிஸ் பண்ண எனக்கு மனசே வரல. ஆனா, என்ன பண்ண?! தாபா குடும்பத்துலதான் எங்க கல்யாணத்துக்கு ஒப்புக்கவே இல்லையே! எங்க வீட்டை பொருத்தவரைக்கும் உடனே ஓகே சொல்லிட்டாங்க.’ என தாபாவைப் பார்க்க, அவர் தொடர்கிறார்.


“எனக்குக் கல்யாணம் நடக்குமா, நடக்காதானு ஒரே குழப்பம். ஏன்னா, எங்க வீட்டுல காதலைப் பற்றி சொல்லும்போது கொஞ்சம்கூட ரியாக்‌ஷனே பண்ணல. ‘ஓ லவ் பண்றியா’னு கேட்டுட்டு விட்டுட்டாங்க. பிடிக்குது, பிடிக்கலைனு எதுவும் சொல்லல. இவர் எங்க வீட்டுக்கு வந்தா, எங்க அம்மா சப்பாத்தியெல்லாம் சுட்டுக் கொடுத்தாங்க. ஆனா, கல்யாணத்துக்குப் பதில் மட்டும் சொல்ல இல்லை” என முடிக்க, ரகு தொடர்ந்தார்.

“எங்க கல்யாணத் தேதி முடிவானவுடனே நாங்கதான் சின்னக் குண்டூசியில இருந்து, பெரிய அண்டா வரைக்கும் எல்லாத்தையும் தேடித் தேடி வாங்குனோம். பெற்றோர்களுடைய ஆசிர்வாதம் மட்டும் இருந்தா போதும்னுதான் நினைச்சோம். எங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ் நடக்காதுனுதான் பலரும் சொன்னாங்க. கஷ்டமோ, நஷ்டமோ பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் நடக்கணும்னு நாங்க தீர்மானமா இருந்தோம், நடந்தது.


முக்கியமா, எங்க கல்யாணத்துக்கு 30 வகையான சாப்பாடு ரெடி பண்ணுனோம். மூர்த்திங்கிறவர்தான் கேட்டரிங் சர்வீஸ் பார்த்துக்கிட்டார். அவர் எந்தக் கல்யாணத்துகெல்லாம் சமைச்சிருக்காரோ, அங்கெல்லாம் போய் யாருக்கும் தெரியாம சாப்பிட்டுத் திருட்டுத்தனமா சாப்பிட்டு வந்துதான் ஓகே பண்னோம்.

காதலிக்கிறப்போ, எங்க ரெண்டுபேருக்கும் நிறைய சண்டை வரும். ஆனா, நான்தான் இறங்கிப்போய் ஸாரி கேட்பேன். முக்கியமா, நான் அடிக்கிற மொக்கை ஜோக்ஸையும் ரகு பொறுத்துக்குவார்.” தாபா சொல்லிச் சிரிக்க.. ரகு தொடர்ந்தார்.

”இவங்க நிகழ்ச்சித் தொகுப்பாளினியா இருக்கிறதனால முதலில் என்னை வெச்சு ரிகர்சல் பார்த்துக்குவாங்க. இவங்க சொல்ற மொக்கை ஜோக்ஸுக்கு நான் சிரிச்சுட்டா, ‘ஓகே இதை இன்னைக்கு ஷோவுல சொல்லிடுறேன்’னு சொல்லிட்டு அதுக்கும் சிரிப்பாங்க பாருங்க.. செம கோபம் வரும். அதேமாதிரி மேடம் இரவு பத்து மணி ஆனாலே தூங்கிடுவாங்க. நான் ரொமான்டிக்கா, ‘ஹாய் பேபி’னு மெசேஜ் அனுப்புனாலும், ‘குட் நைட்’தான் பதிலா வரும்.” ரகு சொல்லும்போதே தாபா குறுக்கிடுகிறார்.

“வரலாற்றில் என் பெயர் இந்த விஷயத்துல மட்டும் கண்டிப்பா இடம்பெறும், அது என்னனா, ‘அதிகமா மன்னிப்பு கேட்ட பெண்மணி’. இவர்கிட்ட அவ்வளவு ஸாரி கேட்டிருக்கேன். இவருடைய டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை இவர்கிட்ட சொல்லவே மாட்டேன். சொன்னா ரொம்ப சீன் போடுவார்.” என்றவர், ரகுவின் சினிமா கனவு பற்றியும் சொன்னார்.

”இவர் கிட்டதட்ட பத்து வருடங்களுக்குமேல சினிமாவுல உதவி நடன இயக்குநரா இருக்கார். சீக்கிரமே இவர் டான்ஸ் மாஸ்டர் ஆகணும்ங்கிறது என் ஆசை. இவர்தான் மாஸ்டர் ஆகிட்டா நமக்கு பட வாய்ப்புகள் வருமான்னு ரொம்ப யோசிக்கிறார். எனக்கு இவர்மேல நிறைய நம்பிக்கை இருக்கு. இவர்கூட சேர்ந்து ஓட நான் எப்போவும் ரெடியா இருக்கேன்.” என ரகுவைத் தாபா காதலோடு கட்டிப்பிடித்துக்கொள்ள, நாங்கள் விடைபெற்றோம்.