தலைப்புச் செய்தியாகியுள்ள சேவல் : பிரான்சில் இப்படியும் ஓர் வழக்கு!!

573


இப்படியும் ஓர் வழக்கு



பிரான்சில், மாரிஸ் என்னும் சேவல் தொடர்பான அசாதாரண வழக்கு ஒன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. சேவல் அதிகாலையில் கூவுகிறது, எங்களால் கொஞ்ச நேரம் தூங்க முடியவில்லை என ஒரு தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் என சின்னதாக சொல்லிவிட்டுப் போகக்கூடிய விடயமல்ல இது.



Saint-Pierre-d’Oléron என்னும் கிராமத்தில் வசிக்கும் Corinne Fesseau என்னும் பெண்மணியின் சேவல், அதிகாலையில் கூவி ஒலி மாசு ஏற்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள்.




ஆனால் அவர்கள் வழக்கு இவ்வளவு பெரிய சென்சேஷனாக மாறும் என அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த Fesseau, மாரிசை நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை. ஆனால் Fesseauக்கும் மாரிசுக்கும் ஆதரவாக பலர் தங்கள் சேவல்களுடன் நீதிமன்ற வாசலில் ஆஜராகியிருந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.


ஆண்டுக்கு சில நாட்கள் மட்டும் கிராமத்திற்கு வந்து தங்கும் தனது அயலகத்தார், ஒரு சேவல் குறித்து கொண்டுள்ள அணுகுமுறை, பிரான்சின் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் உள்ள பெரும் பிளவைக் காட்டுவதாக தெரிவிக்கிறார் Fesseau. நீங்கள் கிராமத்தில் வந்து தங்க விரும்பினால், சேவல் கூவுவதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறும் Fesseau, கிராமம் கிராமமாகத்தான் இருக்கும் என்கிறார்.

இதற்கிடையில் Fesseauவுக்கு பிரான்சில் ஆதரவு குவிந்து வருகிறது. மாரிசைக் காப்பாற்றுவதற்காக ஒன்லைனில் வெளியிடப்பட்டுள்ள புகார் மனு ஒன்றில், இதுவரை சுமார் 120,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். கிராம மேயர் உட்பட பலரும் Fesseauவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ல நிலையில், வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 5 வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 இதற்கிடையில் வீட்டுக்கு செல்வதற்குமுன் பேட்டியளித்த Fesseau, தான் வீட்டுக்கு சென்றதும், மாரிசுக்கு ஒரு முத்தம் கொடுத்து நாம்தான் வழக்கில் வெல்லப்போகிறோம் என்று கூறப்போகிறேன் என்கிறார். மாரீசுக்கு பெருகி வரும் ஆதரவைப் பார்க்கும்போது, Fesseau சொல்வது உண்மைதான் என்றே தோன்றுகிறது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம், சேவல் பிரான்சின் தேசியப் பறவை.