மலிங்க சிறந்த மேட்ச் வின்னர் : அவரை கிரிக்கெட் உலகம் இழக்கும் : ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!!

486


ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி



இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுடன் சிறப்பான நட்பு இருப்பதாகவும், அவர் சிறந்த மேட்ச் வின்னர் என்றும் இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுலின் அபார சதத்தினால் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.




அத்துடன் லசித் மலிங்காவின் உலகக்கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ரோஹித் ஷர்மா உலகக்கோப்பையில் 5 சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.


இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘இந்தச் சாதனைகளை நினைத்ததில்லை. வழக்கம்போல் மைதானத்திற்கு சென்று ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நன்றாக விளையாடினால், இதெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஆடும்போது, ஷாட்களை தெரிவு செய்வது முக்கியம். அதை எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன். அடிக்கக் கூடிய ஷாட்களை மட்டுமே தெரிவு செய்து ஆடினேன், முந்தைய தவறுகளில் இருந்து கற்ற பாடம் இது’ என தெரிவித்துள்ளார்.


மலிங்கா குறித்து அவர் கூறுகையில், ‘அவர் இலங்கைக்கும், மும்பை இந்தியன்ஸுக்கும் சாம்பியன் பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார். அவர் சிறந்த மேட்ச் வின்னர். அவருக்கும் எனக்கும் சிறப்பான நட்பு இருக்கிறது. நெருக்கமாகப் பார்த்திருப்பதால் கூறுகிறேன், அவரை கிரிக்கெட் உலகம் நிச்சயம் இழக்கும்’ என தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதிய நாள் தான். ஒவ்வொரு போட்டியையும் புதிதாகவே பார்ப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் சதத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதாகவும் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.