வவுனியாவில் மயானத்தை உரிமை கோரும் பெரும்பான்மை இன மக்கள்!!

310


வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை பெரும்பான்மை இன மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம் 1, 2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பயன்படுத்தி வந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மயானத்தில் இம் மக்கள் தமது கிராமத்தில் இறந்தவர்களை புதைத்தமைக்கான நினைவுக்கற்களையும் நாட்டியுள்ளனர்.



தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த பொது மயானத்திற்கு அண்மையாக அருகில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் காணிகளை அடா த்தாக பிடித்து குடியேறிவருகின்றனர்.



இந் நிலையில் நேற்றைய தினம் (09.07) குறித்த பொது மயானத்தினை அப்பகுதி தமிழ் மக்கள் துப்பரவு செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த பெரும்பான்மை இன மக்கள் குறித்த காணி தமக்குரியது எனவும் துப்பரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் இன்று (10.07) குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரும்பான்மை இன பிரதேசசபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த காணியில் எவ்வித வேலைகளையும் செய்ய வேண்டாம் எனவும் இவ்விடயம் தொடர்பாக பிரதேசசபையில் கலந்துரையாட வேண்டியுள்ளதால் நாளை தமிழ் கிராமத்தவர்கள் சார்பில் தமது பிரதேசசபைக்கு வருமாறு தெரிவித்து சென்றிருந்ததாகவும் கூறினர்.

இந் நிலையில் குறித்த மயானம் தொடர்பான விடயம் பெரும் முறு கல் நிலையை தோற்றுவித்துள்ளது.