சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு காரில் பயணம் செய்த தமிழக குடும்பத்தினர்!!

329


தமிழக குடும்பத்தினர்



சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு காரிலேயே பயணம் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.



சிங்கப்பூரில் வசித்து வருபவர்கள் அனுபம் மாத்தூர் குடும்பத்தினர். சென்னையைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர், 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான அனுபம், அங்கு வங்கிக் குழுமம் ஒன்றில் திட்டமிடல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.




தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருவதால், மூன்று தலைமுறைகளாக கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் மாத்தூர் குடும்பத்தினர், சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு காரிலேயே பயணம் செய்ய முடிவெடுத்தனர்.


அதற்காக அவர்கள் 17 நாடுகள், இரண்டு கண்டங்கள் என 14,000 மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏழு இருக்கைகள் கொண்ட தங்களுடைய காரில் பயணம் செய்ய நினைத்த அவர்களுக்கு, விசாக்கள் பெறுவது மட்டுமே பெரிய பணியாக இருந்துள்ளது.

தனது பெற்றோர் அகிலேஷ்-அஞ்சனா, மனைவி அதிதி, பிள்ளைகள் அவிவ், அவ்யா ஆகியோருடன் அனுபம் மாத்தூர் பயணத்தை தொடங்கினார். உலகக்கோப்பை தொடங்கி நாளன்று, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அனுபமின் குடும்பத்தினர் தங்கள் பயணத்தை தொடங்கினர்.

சீனாவில் தான் அதிக நாட்கள் இந்த குடும்பத்தினர் செலவிட்டனர். ஆசியாவில் பாதுகாப்பு கருதி, ஓர் இடத்தில் மட்டும் அவர்கள் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மற்றபடி திட்டமிட்ட பாதையில் தான் பயணம் செய்திருக்கின்றனர்.


பயணத்தில் வீட்டில் உள்ள சவுகர்யங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சாலையோரத்திலேயே சமையல் செய்துள்ளனர். ஸ்வீடனில் சாலை வழியாக சென்றபோது, ஆர்டிக் சர்க்கிளை கடந்த தருணத்தை அனுபம் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர். 48 நாட்கள் பயணித்த இந்த குடும்பத்தினர், இறுதியில் பிரித்தானியாவின் லண்டன் நகரை அடைந்தனர்.

ஹெட்டிங்லேவில் நடந்த இந்தியா-இலங்கை போட்டியை கண்டுகளித்த பின்னர், இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இவர்களின் பயணத்தில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை கடந்திருந்தனர்.

இந்தப் பயணம் குறித்து அனுபம் மாத்தூர் கூறுகையில், ‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிறது என்பதை மார்ச் மாதம் நாங்கள் அறிந்தோம். இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் அங்கே இருக்க வேண்டும் என்று விரும்பினோம். விமானத்தில் செல்வது எளிய காரியமாக இருந்திருக்கும்.

ஆனால், நாட்டுக்காக நாம் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும். இதில் எல்லோரும் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். சாலை வழியாக எப்படி செல்வது, எந்த நாடுகள் வழியாக செல்ல வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொண்டேன்.

அவை எல்லாமே சாலை இணைப்பில் இருந்ததை அறிந்து கொண்டேன். அதன்பிறகு மேலதிக விவரங்களுக்கு திட்டமிடத் தொடங்கினோம். சில நாடுகளில் உண்மையிலேயே அனுபவம் மிகுந்த வழிகாட்டுநர்கள் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமான விடயம்.

பிள்ளைப் பருவத்தில் இருந்தே நீண்ட தொலைவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. உலகம் முழுக்க காரில் செல்வது என்பது தான் உச்சபட்ச கனவு. வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக இதையெல்லாம் செய்தோம். இதை எங்கள் நாட்டுக்காக, கிரிக்கெட்டுக்காக செய்கிறோம் என்று பயணம் முழுக்க நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்’ என தெரிவித்துள்ளார்.