ஏழு மணி நேரம் தாமதம் : ஒரே ஒரு பயணிக்காக புறப்பட்ட விமானம்!!

290


ஒரே ஒரு பயணிக்காக..



அமெரிக்காவில் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.



அமெரிக்காவில் பி.எஸ்.ஏ விமான சேவை நிறுவனத்தில் விமானியாக செயல்பட்டு வருகிறார் ரியான் மெக்கார்மிக். இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.




சம்பவத்தன்று மெக்கார்மிக் பணியாற்றிய பி.எஸ்.ஏ விமானம் ஒன்று சில தொழில்நுட்ப காரணங்களால் 7 மணி நேரம் தாமதமானது. குறித்த விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகள் பெரும்பாலானோர் வேறு விமானங்களுக்கு பதிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர்.


ஆனால் ஒரே ஒரு பயணி மட்டும், தாம் காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் மெக்கார்மிக்கின் சொந்த தாயார். ஒரே ஒரு பயணி என்றாலும் விமானத்தை கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், மெக்கார்மிக்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

தாயார் மேரியுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்ட மெக்கார்மிக், தமது தாயாரின் தனிப்பட்ட விமானியாகும் வாய்ப்பு அமைந்த அந்த சம்பவம் தம்மால் மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மெக்கார்மிக்கின் தாயாரும் விமானி என்பதால், தமது மகனுக்கு விளையாட்டு பொருட்களாக விமானங்களையே அவர் வாங்கித் தந்துள்ளார். இதனாலையே, எதிர்காலத்தில் தாயாரை போன்று தாமும் ஒரு விமானியாக வேண்டும் என மெக்கார்மிக் ஆசைப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று தாமதமாகும் விமானத்தின் விமானி தமது மகன் என அறிந்த பின்னர் மேரி, வேறு விமானத்தில் பதிவு செய்ய முயற்சிக்கவில்லை என்பது மட்டுமின்றி, நீண்ட 7 மணி நேரம் அவர் காத்திருக்கவும் செய்துள்ளார் என மெக்கார்மிக் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.