வவுனியாவில் கடும் வறட்சி : 95 ஏக்கர் நெற்பயிற்செய்கை உட்பட பயிர்செய்கையும் பாதிப்பு!!

886


கடும் வறட்சி



வவுனியா மாவட்டத்தில் வறட்சி காரணமாக 95 ஏக்கர் சிறுபோக நெற் செய்கையும் 65 ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டு நிலப் பயிர் செய்கையும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வவுனியா மாவட்டமும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. குளங்களின் நீரும் வற்றியுள்ளதுடன் கிணறுகளிலும் நீர் இன்றி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபடும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக வறட்சியுடன் போராடும் நிலை உருவாகியுள்ளது.




வறட்சியை சமாளிக்கும் வகையில் இம்முறை சிறுபோகத்திற்காக 3, 3 1/2 மாத நெற் பயிர்களை பயிட்ட போதும் மார்ச், யூன், யூலை போன்ற மாதங்களில் மழைவீழ்ச்சி இன்மையாலும் ஏப்ரல், மே மாதங்களில் 120 மில்லி மீற்றர் மழை மட்டுமே கிடைத்தமையாலும் வறட்சி நிலை நீடிக்கிறது.


இதன்காரணமாக 95 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதுடன், விவசாயிகள் கடன் சுமையால் பாதிப்படைந்துள்ளனர். இது தவிர மேட்டு நிலப்பயிர்செய்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

கச்சான், சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், கௌப்பி, உழுந்து, கறிமிளகாய், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட 65 ஏக்கர் மேட்டு நில பயிர்செய்கை அழிவடைந்துள்ளது. வாழைப் பயிர்ச்செய்கையும் 10 ஏக்கர் அளவில் பாதிப்படைந்துள்ளது. இவற்றுடன் அன்னாசி செய்கையும் பாதிப்படைந்துள்ளது.


வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக நஸ்டஈட்டினை கோரி நிற்கின்றனர். அத்துடன் வறட்சி நிலை நீடிக்குமாக இருந்தால் பாதிப்புக்கள் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.