வவுனியாவில் நிலவும் வறட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு!!

370

வறட்சி

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக 89 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். அத்துடன் 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் பாதிப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை வவுனியா மாவட்டத்திலும் தொடர்கிறது. வவுனியா மாவட்டத்தில் இவ்வறட்சி காரணமாக 89 குடும்பங்களைச் சேர்ந்த 120 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது.

இந்த வறட்சிக் காலநிலை இன்னும் தொடர்ந்தால் பயிர்செய்கை பாதிப்புக்கள் இன்னும் அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்படும். ஓமந்தை, பம்பைமடு, கோவில்குளம் போன்ற கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நெற்செய்கை நிலங்களே இவ்வாறு அழிவடைந்துள்ளன.

இராசேந்திரங்குளத்தின் கீழான 60 ஏக்கர் நெற்செய்கை அழிவடைவதைத் தடுக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாகவும், மத்திய நீர்பாசன திணைக்களம் ஊடாகவும் நீர்ப் பம்பிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.

இதுதவிர, வவுனியா வடக்கு ஊஞ்சல் கட்டி, மருதோடை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 49 குடும்பங்களைச் சோந்த 140 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.