அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி!!

672

ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ்ச் சிறுமி, அல்பர்ட் ஐன்ஸ்டினை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை பூர்விகமாக கொண்ட ராதாகிருஷ்ணன் பிரித்தானியாவிலுள்ள இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கிருஷ்ணாம்பாள் என்கிற மனைவியும், ஹரிப்பிரியா (11), ஜெகதீஷ் என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் ஹரிப்பிரியா நுண்ணறிவை சோதனை செய்யும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரித்தானிய மென்சாவின், ‘காட்டல் III பி (Cattell III B)’ தேர்வில் பங்கேற்ற ஹரிப்பிரியா, தேர்வில் சாத்தியமுள்ள மதிப்பீடான 162 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மதிப்பெண்கள் அல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற அறிவியலாளர்களின் மதிப்பீட்டை விட 2 எண்கள் அதிகமாகும். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான ‘கல்ச்ர் பார் (Culture Fair Scale)’ என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து ஹரிப்பிரியா கூறுகையில், தேர்வு முடிவுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றன. நான் எதிர்காலத்த்தில் MI6க்காக பணிபுரியும் ஒரு உளவாளியாக இருக்க விரும்புகிறேன். அதன்மூலம் ஒப்பந்தக் கொலையாளிகள், பணத்திற்காக கொலை செய்யும் ஆசாமிகள், சர்வதேச குற்றவாளிகள் மற்றும் கடத்தல்காரர்களை என்னால் பிடிக்க முடியும் எனத்தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சிறுமியின் தந்தை ராதாகிருஷ்ணன், நடப்பாண்டிற்கான “பிரைட் ஆஃப் ரீடிங்” விருதுகளின் இளம்நபர் பிரிவிற்கு தன்னுடைய மகளின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.