ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து : 5 பேர் சடலமாக மீட்பு : 23 பேர் மாயம்!!

364

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து

நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 23 பேர் மாயமான நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று அதிகாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்துள்ளனர். தடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் தறிகெட்டு ஓடிய பேருந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நேபாள ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் கணவன், மனைவி உள்பட 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த கோர விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.