நீர்க்குடம் உடைந்து வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் : அனுமதி மறுத்த இந்திய இராணுவம்!!

282

கர்ப்பிணிப் பெண்

காஷ்மீர் மாநிலத்தில் நீர்க்குடம் உடைந்து வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியை ஆட்டோவில் செல்வதற்கு இந்திய இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்தே அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதிகளவிலான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தினம்தோறும் மக்கள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் இராணுவத்தின் அத்துமீறலுக்கு இடையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்டு 8ம் திகதியன்று இந்திய இராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இதில் நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய ஏராளமான எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சாட்சிகள் தெரிவிக்கின்றன. பெல்லட் குண்டுகள் மூலம் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுமி உட்பட பலருக்கும் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இன்ஷா அஷ்ரப் (26) என்பவருக்கு திடீரென தண்ணீர்குடம் உடைந்துள்ளது. உடனே இன்ஷாவின் தாய் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை அழைத்து வந்துள்ளார்.

அவரும் மருத்துவமனை கொண்டு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். ஆட்டோவில் இன்ஷா அவருடைய அம்மா முபீனா மற்றும் சகோதரி நிஷா ஆகியோர் புறப்பட்டுள்ளனர். சிறுது தூரம் சென்றதும் ஆட்டோவை நிறுத்திய இந்திய இராணுவ வீரர்கள் இதற்கு மேல் ஆட்டோவில் செல்லக்கூடாது, நடந்து தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். கர்ப்பிணி ஒருவர் வலியால் துடித்து கொண்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர் நீண்ட நேரம் கெஞ்சியும் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.

பின்னர் 8 கிமீ அங்கிருந்து நடையாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஒவ்வொரு இடத்திலும் அனுமதி மறுத்து சுற்றுப்பாதையிலே மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளனர். 500மீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்த போது நடக்க முடியாமல் இன்ஷா தரையில் அமர்ந்துள்ளார்.

 உடனே அவரை கைத்தாங்கலாக அவருடைய சகோதரியும், அம்மாவும் அழைத்து சென்றனர். அங்கு இன்ஷாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அங்கு நிலவும் இணையதள முடக்கம் காரணமாக இந்த தகவல் இன்னும் இன்ஷாவின் கணவருக்கு சென்றடையவில்லை என அவருடைய மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.