வவுனியா நகரசபை உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கினார்களா?

292


வவுனியா நகரசபை



வவுனியா ஹொறவபொத்தான வீதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தால் வவுனியா நகரசபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்றையதினம் (15.08) இடம்பெற்றது. இதன்போது வவுனியா ஹொறவபொத்தான வீதியில் அமைக்கபட்டுள்ள வர்த்தக நிலையம் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருப்பதாக கடந்த அமர்வுகளில் விவாதிக்கபட்டு மூடப்பட்டிருந்தது.



எனினும் தற்போது திறக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அது தொடர்பாக தெளிவுபடுத்துமாறும் குடியிருப்பு வட்டார உறுப்பினரான த.பரதலிங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தார். நாம் ஒரு வேலை நிமித்தமாக கண்டிக்கு சென்ற சமயம் அந்த வர்த்தக நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக சபையின் தவிசாளர் கௌதமன் பதில் தெரிவித்தார்.




இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் லரீப் குறித்த பகுதியில் 32 கடைகள் அனுமதியற்று இருப்பதாகவும் அப்படியானால் அனைத்து கடைகளின் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கடை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற சபை கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்குக்கொண்டார்.


பல வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்களை நாம் இதற்குள் புகுத்த முடியாது. நமது சபை எங்களிடம் உள்ள காலகட்டத்தில் நாம் சரியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்தவனின் பிழையை சாட்டி நாம் பிழைவிடுவது முறையல்ல.

இந்த வர்த்தக நிலையத்துடன் தொடர்புடைய பிரச்சனை எமது காலப்பகுதியில் இடம்பெற்றுவரும் ஒருவிடயம். இதனால் அனைவருக்கும் கெட்டபெயர் உருவாகியுள்ளது. குறித்த கடை விடயத்தில் அனைத்து உறுப்பினர்களும் இருபது இலட்சம் வரையில் இலஞ்சம் வாங்கியுள்ளதாக இணையதளங்களில் எழுதப்பட்டுவருகின்றது.


இதனை இலகுவாக விட்டுவிடமுடியாது. இதற்கு அனுமதி வழங்கபட்டால் இதனை முன்னுதுராணமாக வைத்து பலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவார்கள். எனவே தமிழ் சிங்கள, முஸ்லீம் என யாராக இருந்தாலும் இனிமேல் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று உறுப்பினர் சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.

ஏனைய உறுப்பினர்களான ராஜலிங்கம், காண்டீபன், செந்தில் ரூபன் ஆகியோரும் பல ஆண்டுகளிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்களை பேசிக்கொண்டிருக்காமல் எமது காலப்பகுதிக்குரிய விடயங்களில் சட்டத்தை நடைமுறைபடுத்தி நிர்வாகத்தினை கொண்டு நடாத்த வேண்டும் என்று காட்டமாக தெரிவித்திருந்தனர்.

உறுப்பினர்களான லரீப், பாயிஸ், பாரி ஆகியோர் வர்த்தக நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் கூட்டமைப்மை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இந்த விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் வாக்குவாதம் முற்றியமையால் 5 நிமிடங்கள் சபையை ஒத்திவைப்பதாக தவிசாளர் உத்தரவிட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த விடயம் கலந்துரையாடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.