உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி : முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை!!

473


இலங்கை அணி



நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.




இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.


நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்கொலஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 5 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 267 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தது. இலங்கை அணி சார்பாக டிக்வெல்ல 61 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 53 ஓட்டங்களையம் மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் 18 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும்இழக்க இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அபாரமாக விளையாடி வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. திரிமான்னேயின் அரைச்சதமும் (64) அணித்தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் (122) கைகொடுக்க இலங்கை அணி தனது சொந்த மண்ணில் கைத்து நியூசிலாந்து அணியை வெற்றி கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.