வவுனியாவில் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த 3 குடும்பத்தினரால் கிராமத்தினை விட்டு வெளியேரும் நிலையில் 89 குடும்பங்கள்!!

324

வவுனியா செட்டிக்குளம்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் கிராமத்தில் இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களுமாக 100 குடும்பங்கள் இக்கிராமத்தில் 2001ம் ஆண்டிலிருந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். அத்துடன் அவர்களுக்கிடையே எவ்வித சமய வேறுபாடோ அல்லது மதத்துவேசமோ இருந்தது இல்லை.

அக்கிராமத்தில் புதிதாக குடியேறிய குடும்பம் ஒன்று அவர்களின் குடியிருப்புக்காக வழங்கப்பட்ட காணியில் கிறிஸ்தவ சபை ஒன்றினை அமைத்து மற்ற சமயங்களை தவறான முறையில் பேசியும் அக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு வேதனையளிக்கும் முறையில் நடந்து கொள்கின்றனர் என தெரிவித்து அக் கிராம மக்கள் பல்வேறு தரப்பினருக்கு மகஜர் மற்றும் முறைபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களினால் பல்வேறு இடங்களுக்கு வழங்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது கிராமத்தில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். இங்கு கிறிஸ்தவ சபையை சேர்ந்த11 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 09 குடும்பங்கள் துடரிக்குளத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். மிகுதி 3 குடும்பங்கள் எமது கங்கன்குளம் கிராமத்தில் அத்துமீறி சபை ஒன்றினை அமைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச் செயல் இங்கு வசிக்கும் எங்களுக்கு மிக வேதனையாகவுள்ளது. இவர்கள் பகல் மற்றும் இரவு வேளைகளிலும் சத்தமிடுவதினால் எமது கிராமத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் நடந்தாலும் எமக்கு தெரிவதில்லை. எனவே இவ் ஆலயத்தினை வேறு இடத்திற்கு மாற்றமாறும்,

இச் சபைக்கு வேறு கிராமத்திலிருந்தே மக்கள் வருகின்றனர். அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுவதும் சத்தம் இடுவது எமது கிராமத்திற்கு அமைதியை சீர்குழைப்பது போல் உள்ளது. அத்துடன் புதிய சபை ஒன்றை அமைத்து சட்டவிரோதமாக இருப்பினும் இவர்களுக்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

எனவே சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றி இச்சபையின் செயற்பாடுகளையும் நிறுத்தி எமது கிராமத்தின் அமைதியினை மீண்டும் பெற்றுத்தருமாறு அனைத்து அதிகாரிகள் மற்றும் இவ்விடயம் சார்ந்த அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் சபை விடயம் பிணக்கு மற்றும் தவறு மத்தியஸ்த சபைக்கு சென்ற சமயத்தில், செட்டிக்குளம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடியதன் பிரகாரமும் மத்தியஸ்த சபையின் கருத்தாய்வின் படியும் மத வழிபாட்டினை தடை செய்ய முடியாது என்றும் ஆனால் பாரிய சமூக பிரச்சனை உருவாகாத வண்ணம் ஊரோடு இணங்கி வாழ வேண்டும் என்ற நியதியின்படி கங்கன்குளத்தில் வசிப்பவர்கள் மட்டும் தற்போது இவ் வளவுக்குள் ஆராதனையில் ஈடுபட இணக்கம் காணப்படுபட்டுள்ளது.

எனினும் தற்போதும் இச் சபைக்கு வேறு கிராமத்திலிருந்தே மக்கள் வருவதாகவும் கிராமத்தின் அமைதியினை சீர்குழைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். உடனடியாக இச் சபை கட்டடிடத்தினை அகற்றுமாறும் அகற்றாத பட்சத்தில் பொலிஸ் மூலம் அகற்றப்படும் என கிராம சேவையாளர் தெரிவித்திருந்த போதிலும் சபை கட்டிடம் அகற்றப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பாக கங்கங்குளம் கிராம சேவையாளரிடம் வினவிய போது, நான் குறித்த கிராம சேவையாளர் பிரிவினை கடமையேற்று 5 மாதங்களே ஆகின்றன. இவ்விடயம் தொடர்பாக நான் அறிந்துள்ளேன்.இவ்விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் உத்தரவினை பெற்று தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியுமென தெரிவித்தார்.