வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம்!!

575

கார்த்திகை தீபம்

வவுனியாவில் இந்து ஆலயங்களில் நேற்று (10.12) மாலை கார்த்திகை தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.

ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து ‘சொக்கப்பனை’க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர். கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள பல இந்து ஆலயங்களில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு மத்தியில் விசேட அபிடேக, பூஜை வழிபாடுகளின் பின் குமாரலய தீபம் ஏற்றப்பட்டது.

ஆலயத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானையில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுவாமி வெளி வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.