ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!

1410


இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும் கூட இயங்கும் தன்மை என்பது அவசியமாகின்றது.

ஒருவருடைய இயங்கும் தன்மையானது மட்டுப்படுத்தப்படும்போது தனது சகவயது உடையவர்களுக்கு சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்புக்களை அவர் அடையமுடியாமல் போவதனால் கல்வி, தொழில், பொழுதுபோக்கு மற்றும் சமூக நடவடிக்கைகளில் தனது உரிமைகளை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தினை அவர் இழக்க நேரிடுகின்றது.



ஊனமுற்றவர்களை சமூகத்தில் உள்ளடக்குவதிலும் பங்கேற்க செய்வதிலும் துணை இயக்க சாதனங்கள் நுழைவுப்புள்ளியாக அமைகின்றன. அவர்கள் தமது உரிமைகளை அனுபவிக்கவும் சமூகத்தில் கண்ணியமாக வாழவும் இச் சாதனங்கள் உதவுகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் ஊனமுற்றவர்களிற்கான உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் ஊனமுற்றவர்களின் கௌரவம் மரியாதை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளிற்கான சம உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



இப் பிரகடனத்தின் 04,20,26 ஆகிய உறுப்புரைகளில் ஊனமுற்றவர்களின் தனிப்பட்ட இயக்கம் மற்றும் உலக தரம் வாய்ந்த துணை இயக்க தொழில் நுட்பங்களை அல்லது குறைந்தளவு மாற்றியமைக்கப்பட்ட துணை இயக்க சாதனங்களைப் பயன்படுத்தி அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்காக சமூகத்தில் பங்கேற்க செய்தல் என்பவை தொடர்பான வினைத்திறனுள்ள அளவீடுகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இப் பிரகடனம் 13 டிசம்பர் 2006 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக்கூட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.



இலங்கை 8 பெப்ரவரி 2016 அன்று 162 ஆவது நாடாக இப் பிரகடனத்தை ஒப்புக் கொண்டதன் மூலமாக ஊனமுற்றோரின் இயங்கும் தன்மை மற்றும் சமூகத்தில் இணைந்து செயற்படல் தொடர்பான உரிமைகள் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட 04,20,26 ஆகிய உறுப்புரைகளின் விதிமுறைகளிற்கு அமைந்து நடப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.


ஊனமுற்றோரின் இயக்கத்திற்கு பேருதவி புரியும் ஒரு துணை இயக்க சாதனமாக சக்கரநாற்காலியும் அடையாளம் காணப்பட்டுள்ளது இது பொதுவாக முள்ளந்தண்டு வடக்காயம், இரண்டு கால்களும் அகற்றப்பட்டோர், போலியோ மற்றும் பெருமூளை வாதம் போன்று அதிக அளவில் இயங்கும் தன்மை பாதிக்கப்பட்டவர்களின் இயங்கும் தன்மையை அதிகரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றது.

நீண்ட கால பாவனையாளர்களுக்கு தரமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான சக்கரநாற்காலிகளை பயன்படுத்துவதன் மூலம் படுக்கைப் புண், முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு, மூட்டு இறுக்கம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.


பொருத்தமான சக்கரநாற்காலி ஒன்றினை வழங்குவதன் மூலம் பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் உடல் அமைப்பின் நிலையினை பேண முடிவதுடன் இறுக்கம் கூடிய தசைகளின் இறுக்கத் தன்மையை குறைத்து வளர்ச்சிப் பாதையின் மைல்கற்களை அடைவதிலும் உதவ முடியும். எனவே சக்கரநாற்காலி இங்கு ஒரு துணை இயக்க சாதனம் என்பதையும் தாண்டி ஒரு மருத்துவ உபகரணமாக பயன்படுகின்றது.

மேலும் சக்கரநாற்காலியானது பாவனையாளர் வாழும் சூழலுக்கு பொருந்தக்கூடிய வகையில் அமைய வேண்டும் பொதுவாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சக்கரநாற்காலியை கரடுமுரமான மற்றும் செப்பனிடப்படாத சாலைகளில் பாவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது அவர்களுடைய சக்கரநாற்காலி குறித்த சூழலுக்கு பொருத்தமானதாக இல்லாவிடில் பாவனையாளர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும்.


சக்கரநாற்காலிகள் சற்று விலை உயர்ந்த உபகரணங்கள் ஆகையால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தொடர் சக்கர நாற்காலி சேவைகளை பேணுவதற்கு தரமான கடுமையான நிலைகளிலும் நீண்டகால பாவனை தரக்கூடிய நாற்காலிகளை வழங்குவது, மற்றும் சக்கரநாற்காலி பாகங்களை உள்நாட்டில் கிடைக்கும்படியாக செய்வதும் நாற்காலிகளைத் திருத்துவதற்குரிய பயிற்சிகளை வழங்குவது என்பன அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனமானது சக்கரநாற்காலிகளின் தரத்தை உறுதிப்படுத்துத்துவற்காகத் தனது அங்கத்துவ நாடுகளில் தேசிய சக்கரநாற்காலித் தரநிலைமையை மேம்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் உற்சாகப்படுத்தி வருகின்றது.

சக்கர நாற்காலி வழங்கும் சேவையானது சிகிச்கை முறையில் அமைய வேண்டும் பொருத்தமான ஒரு மருத்துவ நபரின் பங்கேற்பு என்பது ஆரம்பகட்ட மதிப்பீடு சக்கரநாற்காலி பரிந்துரைப்பு, பொருந்தும் தன்மை மற்றும் தொடர்ச்சியான மேற்பார்வை என்பவற்றில் அவசியமானதாகும். இப் படிநிலைகளில் ஏதேனும் ஒரு தவறு நேரும் பட்சத்தில் அது பயனாளரில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சக்கர நாற்காலி வழங்கும் சேவையின் மற்றுமொரு முக்கியமான படி ஆனது பாவனையாளர்களுக்கான அடிப்படைத் திறன் பயிற்சி ஆகும். இதன் மூலம் பாவனையாளர்களும் அவர்களைக் கவனித்துக் கொள்வோரும் நல்ல இயங்கும் தன்மைக்கான மேம்பட்ட சக்கரநாற்காலி பாவிப்பு முறை அமுக்கத்தை குறைப்பதற்கான உத்திகள் கொண்டு செல்லும் உத்திகள் மற்றும் சக்கர நாற்காலி பராமரிப்பு என்பன பற்றி அறிந்து கொள்ள முடியும் இதுவே சக்கர நாற்காலி வழங்கும் சேவையின் மிக முக்கியமான படிமுறை ஆகும்.

ஊனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சக்கர நாற்காலிகளை வழங்குவது என்பது அனைத்து நாடுகளினதும் பிரதான கடமையாகும் தொடர்ச்சியான சேவையை பேணுவதற்குப் பொருத்தமான தேசிய கொள்கைகளை வடிவமைத்தல், சக்கரநாற்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம், பயிற்சி மற்றும் நிதிவழங்கல் என்பன முக்கியமானவையாகும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொருத்தமான சக்கரநாற்காலி வழங்கும் சேவையானது நன்றாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுடைய சுகாதார சேவை அமைப்பில் உள்வாங்கப்பட்டு நன்றாக விருத்தி செய்யப்பட்டுள்ளது. அவர்களிற்கு சமமான அளவில் சக்கரநாற்காலி சேவையை நிர்மாணிப்பது என்பது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிதித் தடைகளின் காரணமாக மிகப் பெரிய சவாலாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் தனது அங்கத்துவ நாடுகளில் சக்கரநாற்காலி வழங்கும் சேவைகளினை மேம்படுத்துவதற்றாக ‘குறைவான வளங்களைக் கொண்ட இடங்களில் வினைத்திறனாக சக்கர நாற்காலிகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்’ என்ற வழிகாட்டி ஆவணத்தை உருவாக்கியுள்ளது.

2012 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் துறையின் தரவுகளின்படி இலங்கையின் மொத்த மக்கள் குடித் தொகையில் 8.7 வீதமானோர் ஊனமுற்றோர் ஆவர்.

30 வருட கால உள்நாட்டு யுத்தமானது பல இளம் இலங்கையர்கள் உடல் உறுப்புக்களை இழக்க காரணமாக அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட வீதி வலையமைப்புக்களும் விருத்தியடைந்த வேகமான போக்குவரத்து வசதிகளும் பல விபத்துகளுக்கும் அகன் மூலம் அதிக ஊனமுற்றோர் உருவாகவும் காரணமாகின்றன குறைவான உடல் உழைப்புடன் கலாச்சார உணவிற்கு பதிலாக விரைவு உணவுகளும் இலங்கையின் இளம் தலைமுறையினரில் சர்க்கரை, உயர்குருதி அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுடன் இயங்கும் தன்மை தொடர்பான நோய்களையும் ஏற்படுத்துத்துகின்றன.

இலங்கையானது அதன் இலவச சுகாதார சேவை முறைமை காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு நிகரான சுகாதார சுட்டியினை கொண்டிருக்கின்றது என்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது ஆனாலும் அதன் துணை இயக்க சாதன வசதிகளை வழங்குகின்ற துறையானது மிகவும் குறைவான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தினது வளர்முக நாடுகளிற்கான சக்கரநாற்காலி சேவை வழங்கும் திட்டத்திற்கான அடிப்படை வழிகாட்டுதல்களில் இலங்கை இன்னும் ஆகக்குறைந்த தேவைகளையேனும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.

இலங்கையின் சுகாதார சேவை முறையில் சக்கர நாற்காலிகளை வழங்குவதற்கான திட்ட நடைமுறையொன்று இல்லாமையினால் தேவையேற்படுவோர் பெரும்பாலும் உள்ளுர் விநியோகஸ்தர்களையும் மேலதிகமாக வேறு சந்தர்ப்பங்களையும் நாடுகின்றனர்.

தற்போது இலங்கையில் சமூக நல மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஊனமுற்றோருக்கான சேவைகள் கையாளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மையமாகவுள்ளது. இவ்வமைச்சு ஏனைய தேவையான அமைச்சுக்களுடன் இணைந்து இவ் ஊனமுற்றோர்களுக்கான நலத்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கின்றது.

மாகாண சபைகளினூடாகவும் ஊனமுற்றோர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனினும் அதற்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மற்றும் நிதிசார் குறைபாடுகளினால் அவை சிரமத்தை எதிர்நோக்க நேரிடுகின்றது.

இவ்விரு தாபனங்களும் இவ்வகையான துணை இயக்க சாதனங்களை வழங்கிவரும் பிரதான நிறுவனங்கள்; ஆயினும் இவர்களினது சேவையினது தரமானது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது.

சக்கர நாற்காலியானது கிராமசேவகர், பிரதேச செயலாளர் மற்றும் அரச சைத்திய அதிகாரி ஆகியோரினது சிபாரிசுடன் வழங்கப்படுகின்றது எனினும் இவ்வகையான சக்கர நாற்காலிகளினது தரமானது உலக சுகாதார நிறுவனத்தினது தர சான்றிதழின் அடிப்படை விதிகளுக்கு கூட அமைவாக இருப்பதில்லை.

சக்கர நாற்காலிகளை பரிந்துரைக்கும் விசேட நிபுணரின் கணிப்பீடு, பரிந்துரைப்பு வழங்குதல் தொடர்ச்சியான மேற்பார்வை என்பன சக்கர நாற்காலிகளை வழங்கும் செயற்பாட்டில் இருப்பதில்லையாதலினால் பொருத்தமான மக்களை சக்கர நாற்காலிகள் சென்றடைவதில்லை.

பொதுவாக இவ்வுபகரணங்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்டப்ட நிதியின் அடிப்படையில் மொத்தமாக கொள்வனவு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் அவையாவும் ஒரே அளவு பரிமாணங்களையும் தரத்தையும் கொண்டவையாகும்.

எனவே வௌவேறு உடற்பருமன் வயது, அங்கவீனத்தின் தன்மை உடைய பாவனையாளர்களும் ஒரே வகையான அவர்களுக்கு பொருத்தமற்ற சக்கர நாற்காலிகளையே பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறான பொருத்தமற்ற சக்கரநாற்காலிகள் பாவனையாளர்களின் வாழ்கைத்தரத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

முதல் படத்தில் குழந்தை ஒன்று வளர்ந்தோர்கெனப் பரிந்துரைக்கப்பட வேண்டிய சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதை காணமுடிகின்றது இது அவரின் உடற்பருமனை விடவும் பெரியதாகும். இந் நாற்காலியின் பெரிய அளவிலான இருக்கையால் இக் குழந்தைக்கு எதுவித ஆதாரத்தையும் வழங்க இயலாதுள்ளது இதனால்; முள்ளந்தண்டானது நிரந்தரமான பக்க வளைதலுக்கு உள்ளாகும் கால்கள் அவற்றுக்கென அமைக்கப்டப்டுள்ள தாங்கும் ஆதாரத்தை சேராதிருப்பதனால் அது கால்களின் ஒழுங்கற்ற வளர்ச்சிக்கும் அல்லது மூட்டுக்கள் இறுகுவதற்கும் இட்டுச் செல்கின்றது.

எனவே பொருத்தமற்ற சக்கரநாற்காலியினை பயன்படுத்தும் போது முன்னர் இருந்ததை விட உடல் குறைபாடுகள் அதிகரிக்க நேரிடுகின்றது. துரதிஷ்டவசமாக எமது நாட்டின் பெரும்பாலான ஊனமுற்ற சிறார்கள் இவ்வகை சக்கர நாற்காலிளையே பாவிக்கின்றனர்.

சக்கரநாற்காலியில் பொருத்தமான அமுக்க நிவாரண மெத்தைகள்; ஏதுமின்றி அமர்ந்திருக்கும் பாவனையாளர்களுக்கு (விசேடமாக உணர்வு அற்றவர்களுக்கு) அழுத்தப்புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும் என்புத் தொகுதிக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான அமுக்கம், இரத்த குழாய்களை அடைத்து தோலுக்கான குருதி வழங்கலைத் தடைசெய்வதால் அவை அழிவடைந்து புண்களை தோற்றுவிக்கின்றது.

இவ்வகையான அழுத்தத்தினால் ஏற்படும் புண்கள் சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து தொற்றுக்குள்ளாகி உயிராபத்தினை ஏற்படுத்த கூடியவையாகும். குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் மரணவீதத்தை அதிகரிக்கும் பிரதான காரணி இதுவேயாகும்.

இவ்வாறான மிகவும் முக்கியமான பிரச்சனை ஒன்றானது சக்கர நாற்காலிகளை வழங்கும் போது இந் நாட்டில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.

மேலும் பயனாளிகள் சக்கரநாற்காலிகளை உபயோகிக்க பயிற்சியளிக்கப்படுவதில்லை ஆகையால் அவர்கள் அந் நாற்காலிகளை திறம்பட பாவிக்க முடியாதுள்ளதுடன் துணை / இரண்டாம் கட்ட காயங்களுக்கும் வேறு பாதகமான விளைவுகளுக்கும் உட்பட நேர்கின்றது.

இவ் உபகரணங்கள் மக்களின் நன்மை கருதி அவர்களின் வரி அறவீட்டின் மூலமே கொள்வனவு செய்யப்படுகின்றன எனினும், அவை பொருத்தமானவாறு பாவனையாளர்களை அடைய முடியாவிடின் அவர்களின் ஆரோக்கியம் மேலும் நலிவுறவும் காரணமாயமைகின்றன இதனால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகின்றது.

பிறநாடுகள் சிலவற்றில் துணை இயக்க உபகரணங்கள் சுகாதார அமைச்சு, சமூக சேவை அமைச்சு பாதுகாப்பு அமைச்சு என்பவற்றினூடாக வழங்கப்படுகின்றன. எனினும் எமது நாட்டில் இதனை சுகாதார அமைச்சினூடாகவே வினைத்திறனாக செய்ய முடியும். என நம்புகின்றேன். றாகம புனர்வாழ்வு மருத்துவமனையின் சக்கரநாற்காலி வழங்கற்சேவை, இதற்கான சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும்.

நாட்டின் முழுப் பாகத்திற்கும் சுகாதார சேவையானது விஸ்தரிக்கப்பட்டுள்ளமையால் இச் சக்கரநாற்காலி வழங்கும் சேவையை குறித்த அமைச்சினுள் கொண்டு வருவதே இலகுவானதும் இலாபகரமானதுமாகும்.

ஒவ்வோர் மாவட்டத்தினதும் பொது வைத்தியசாலைகளில் துணை இயக்க உபகரணம் மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் அலகுகளை உருவாக்கி, அங்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள வைத்திய சேவை உதவியாளர்களை தொழில்நுட்பவியலாளர்களாக பயிற்றுவிப்பது இயலுமானதொன்றாகும்.

மேலும் வைத்தியசாலைகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இயன்மருத்துவர்கள் தொழில்வழி சிகிச்சையாளர்கள்; அல்லது செயற்கை அவையவ நிபுணர்களுக்கு தேவையான பொருத்தமான மேலதிக பயிற்சிகளை வழங்குவதன் மூலம் விசேட மருத்துவ நிபுணர்களையும் உருவாக்க முடியும்.

அதிகரிக்கின்ற (ஏறத்தாழ 10%) தங்கியிருப்போரினது தொகையுடன் எமது நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்வது கடினமானதாகும். எனவே அவர்களையும் அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் மனிதவலுவிற்குள் அரவணைத்து செல்வதே சிறந்த முறையாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி துணையான இயக்க உபகரணங்களான சக்கரநாற்காலி போன்றவை அங்கவீனமற்றோரை பொது சமூகத்தினுள் உள்ளடக்குவதற்கான உபாயமாதலால் அரசாங்கமானது இதனை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசதாபனங்கள் தற்போதய நிலைப்பாட்டின்படி ஏதாவதொன்றை பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட சிறந்தது. என்பதற்கு அமைவாகவே சக்கரநாற்கலிகளை வழங்கும் திட்டமானது நடைபெற்று வருகின்றது. ஆயினும் இவ் எண்ணமானது எப்போதும் சரியான ஒன்று அல்ல என்பதால் இக்கொள்கையில் சாதகமான மாற்றம் ஒன்றிற்கு இதுவே தக்க தருணமாகும்.

ஆக்கம் :

தி.கேதீஸ்வரன் (B.Sc PT)

இயன்மருத்துவர்

மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா