அவுஸ்திரேலிய சட்டத்தினால் திணறும் இலங்கைத் தமிழர்..

392

FEE APPLIES Asylum seekers arrive and are processed on Cocos Island today, Sunday 8th July. Pic Karen Willshaw.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.

2012.08.13ம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப் பயணமாகவே அமைகின்றது. தமிழ் அகதிகள் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை தொடர்கின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், தற்போது அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களமானது தனது சட்டத்தில் பாரிய திருத்தங்களை எற்படுத்தி உள்ளது. இந்த திருத்தங்களுடன் வழங்கப்படும் தற்காலிக விஸாவானது தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில் ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர்.

2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இடம்பெயர்வோரைக் கடத்துவதற்கெதிரான ஒத்துழைப்பு பற்றிய அவுஸ்திரேலிய – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான சட்ட அமைப்புக்களில் உள்ள குறைபாடுகளை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஆட்களைக் கடத்துவதற்கெதிரான சட்டவரைபுகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்கவென அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையிலும் ஆட்கடத்தல் நடைமுறைகள் அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.