கொரோனா வைரஸால் பெருகிவரும் இயற்கை வளங்கள்!!

314

மிகவும் சாதாரணமாக சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகில் பல நாடுகளுக்கு பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் முடக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டமானது அமுலில் இருந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொது மக்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய சேவைகள் தவிர பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதேபோல நம் நாட்டின் இயற்கை வளங்களை சூரையாடும் நாசகார கும்பல்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருட்கள் பரிமாற்றம் பல தடுக்கப்பட்டுள்ளன, மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த சில நாட்களாக மீன் பிடி தொழிலும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில் அதிலும் குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளமை காரணமாக கடலில் மீன் வளம் பெருகியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 4 நாட்களுக்கு பின்னர் கடற்றொழிலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை கடற்றொழிலுக்கு சென்றிருந்த யாழ். கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 4000 கிலோகிராம் பாரை மீன் அகப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கல்முனையில் அதிகளவான வளையா மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை புறநகர் பகுதிகளில் மீனவரொருவருக்கு சொந்தமான தோனியில் சுமார் 30 முதல் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் பெரும்பாலானவை வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தற்போதைய கட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பொலிஸார், அதிரடிப்படையினர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் தான் கடலில் மீன்வளம் அதிகரித்துள்ளதாக சமூக அவதானிகள் கூறுகின்றனர்.

எனவே மனிதர்களாகிய நாம் கொரோனா வந்தால் மாத்திரமே இயற்கைக்கு எதிராக செய்யும் நாசகார செயல்களை நிறுத்துவோமானால் இயற்கை கொடுக்கும் பேரழிவில் எண்ணிலடங்காத உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

எனவே நாம் நமது சுகாதாரத்தையும் பாதுகாத்து கொண்டு, இயற்கை வளங்களையும் பாதுகாப்பாக பேணி வாழ்வோமானால் மனித இனத்திற்கு எதிரான இயற்கை பேரழிவுகளும் சாத்தியமில்லை.