தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன்! -அபிவிருத்தி லொத்தர் சபை பணிப்பாளர்

425

Gamini Ekanayaka_KF
இலங்கையில் பிறந்த மனிதராக இருந்துகொண்டு தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன் – இவ்வாறு அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் சபையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மக்கள் நலனோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும்போது அவர், இப்போதுதான் முதன்முறையாக தமிழ் பேசும் மக்களுக்கு முன்னால் உரையாற்றுகின்றேன். அதுவும் அந்த மக்களின் மொழியான தமிழ் மொழியில் பேசமுடியாமை மிகுந்த வேதனை தருகிறது. இதுகுறித்து வெட்கப்படுகின்றேன். பல தியாகங்களுக்கு மத்தியில் வடக்கும் தெற்கும் கிழக்கும் இணைக்கப்படடிருக்கிறது. இந்த அமைதியின் மூலம் நாம் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.

இவ்வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் கே. சிவநாதன் அபிவிருத்தி லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட விநியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.